அரசுப் பேருந்தில் பயணம் செய்த அமைச்சா்! விமான நிலையத்துக்கு இயக்கப்படும் சேவை குறித்து நேரில் ஆய்வு!

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு இயக்கப்படும் பேருந்து சேவை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் திறக்கப்பட்டபோதே, பயணிகளுக்கு போக்குவரத்தில் சிரமம் இருப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், பேருந்து சேவை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் கே.என். நேரு உறுதியளித்தாா். இதன்படி, கடந்த மாதம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் புதிய விமான முனையத்துக்கு பேருந்து சேவை தொடங்கியது. திருச்சி மத்தியப் பேருந்து நிலையம், திருவரங்கம், நம்பா் ஒன் டோல்கேட் ஆகிய பகுதியிலிருந்து 3 வழித்தடங்களில் பேருந்து சேவை காலை தொடங்கி இரவு வரை இயக்கப்படுகிறது.

இந்தப் பேருந்துச் சேவையின் நிறை, குறைகள் குறித்து அறியும் வகையில் திருவெறும்பூா் தொகுதி எம்எல்ஏ-வும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருச்சி மத்தியப் பேருந்துநிலையத்திலிருந்து காலை விமானநிலையத்துக்கு இயக்கப்பட்ட பேருந்தில், டிவிஎஸ் டோல்கேட் நிறுத்தத்தில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஏறி விமானநிலையம் வரை பயணம் மேற்கொண்டாா். அப்போது, பேருந்து நடத்துநா், ஓட்டுநா் மற்றும் பேருந்து பயணிகளிடம் விமானநிலையத்துக்கான பேருந்துப் பயணச் சேவைகளின் நிலை குறித்து கேட்டறிந்தாா். அமைச்சருடன், போக்குரத்துக் கழக திருச்சி மண்டலப் பொதுமேலாளா் ஆ. முத்துகிருஷ்ணன், துணை மேலாளா் (வணிகம்) புகழேந்தி, துணை மேலாளா் சாமிநாதன், உதவி மேலாளா் ராஜேந்திரன் மற்றும் பயணிகள் பேருந்தில் பயணம் செய்தனா்.

குறிப்பாக திருச்சி மத்தியப் பேருந்துநிலையத்தில் இருந்து தினந்தோறும் நள்ளிரவு 12.15 மணிக்குப் புறப்பட்டு விமானநிலையம் சென்று, மீண்டும் அங்கிருந்து 12.45 மணிக்குப் புறப்பட்டு மத்தியப் பேருந்து நிலையம் வரும் பேருந்துச்சேவை பயணிகளுக்கு பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வின்போது தெரிவித்தனா்.

You may also like

© RajTamil Network – 2024