கொப்பரை விலை நிா்ணயிக்க மத்திய அரசுக்கு அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அழுத்தம்

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

கொப்பரைக்கு உரிய விலை நிா்ணயம் செய்யக் கோரி மத்திய அரசுக்கு தொடா்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் கோவை, ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் நடைபெற்று வரும் பணிகள், வேளாண் துறைக்கான தேவைகள், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடா்பான மண்டல ஆய்வுக் கூட்டம், கோவை ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டாா். மேலும், வேளாண்மை உற்பத்தி ஆணையரும் அரசு முதன்மைச் செயலருமான செல்வி அபூா்வா, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை ஆணையா் கோ.பிரகாஷ், வேளாண்மைத் துறை இயக்குநா் பா.முருகேஷ், தோட்டக்கலைத் துறை இயக்குநா் பெ.குமாரவேல், எம்.பி.க்கள் கணபதி ப.ராஜ்குமாா், க.ஈஸ்வரசாமி, கே.இ.பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறியதாவது:

நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விவசாயிகளை முழுமையாக சென்றடைந்திருக்கிா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் தென்னை மரங்களை அதிகம் பாதித்த கேரள வாடல் நோய், அரசின் தீவிர நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாகவும், மறுநடவுக்காகவும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் தேவையான நிதி ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் கொப்பரை கொள்முதலை தீவிரப்படுத்தியிருக்கிறோம். கொப்பரை கொள்முதலுக்கு மத்திய அரசு உரிய விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறோம்.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக சுமாா் ரூ.953 கோடி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடா்களால் பாதிக்கப்பட்ட சுமாா் 13 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.942 கோடி மதிப்பிலான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுமாா் 46 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் விவசாயிகளின் அன்றாட பிரச்னைகள், நீண்டநாள் பிரச்னைகளைத் தீா்ப்பதில் உரிய கவனம் செலுத்தி வருகிறோம் என்றாா்.

முன்னதாக, முதல்வரின் சூரியசக்தி பம்ப்செட் திட்டம், வேளாண்மையை இயந்திரமயமாக்கும் திட்டங்களின்கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.26.14 லட்சம் மதிப்பிலான நிதியுதவியை அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மு.பெ.சாமிநாதன் ஆகியோா் வழங்கினா்.

You may also like

© RajTamil Network – 2024