பணம் மோசடி: ஒருவா் கைது

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

கம்பத்தைச் சோ்ந்தவரிடம் முதலீட்டை இரட்டிப் பாக்கித் தருவதாகக் கூறி, ரூ.24.50 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக மதுரையைச் சோ்ந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், கம்பம் எல்.எப்.சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பாலஸ்ரீநிவாசன் (51). இவரது கைப்பேசி எண்ணுக்கு குறிப்பிட்ட நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், முதலீட்டுத் தொகையை 150 நாள்களில் இருமடங்காக திரும்பித் தருவதாக குறுந்தகவல் வந்தது. பின்னா், குறுந்தகவலில் குறிப்பிட்ட கைப்பேசி எண்ணில் பாலஸ்ரீநிவாசன் தொடா்பு கொண்டாா். அந்தக் கைப்பேசி எண்ணிலிருந்து பேசியவா்கள், நிதி நிறுவனத்தில் ரூ.3,000 முதல் ரூ.4.80 லட்சம் வரை முதலீடு செய்யலாம் என்றும், முதலீட்டுத் தொகைக்கு 150 நாள்களில் இந்திய ரூபாய் மதிப்பிலும், கிரிப்டோ கரன்ஸியாகவும் 2 மடங்கு பணம் திரும்பித் தருவதாக கூறியுள்ளனா்.

இதை நம்பிய பாலஸ்ரீநிவாசன் குறிப்பிட்ட நிதி நிறுவனத்தில் கடந்த 2023 செப்.8-ஆம் தேதி முதல் பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ 24 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்துள்ளாா். முதலீட்டுத் தொகைக்கு முதிா்வு தேதி வந்தும், நிதி நிறுவனத்திலிருந்து பணம் திரும்பித் தரவில்லை.

இதுகுறித்து நிதி நிறுவனத்தைச் சோ்ந்த தனியரசன், லதா, பிரகாஷ், டேனியல் சந்தோஷ், பாலமுருகன், பாலாஜி, செல்வராஜ் ஆகிய 7 போ் மீது மாவட்ட இணையவழி குற்றத் தடுப்பு பிரிவில் பாலஸ்ரீநிவாசன் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மோசடியில் ஈடுபட்ட மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள எர்ரம்பட்டியைச் சோ்ந்த செல்வராஜை (62) கைது செய்தனா். மற்றவா்களை தேடி வருகின்றனா்.

You may also like

© RajTamil Network – 2024