தூய்மைப் பணியாளர் வேலைக்கு 40,000 பட்டதாரிகள் விண்ணப்பம்!

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

ஹரியாணாவை வாட்டும் வேலையின்மையால் தூய்மைப் பணியாளர் வேலைக்கு 40,000 பட்டதாரிகள் உள்பட 3.95 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஹரியாணா ‘கௌஷல் ரோஸ்கர் நிகாம்’ ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கான தேடலில், ​​39,990 இளங்கலைப் பட்டதாரிகள், 6,112 முதுகலைப் பட்டதாரிகள், 12 ஆம் வகுப்பு வரை படித்தவர் 1,17,144 பேர் உள்பட 3 லட்சத்து 95 ஆயிரம் பேர் இந்த வேலைகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

வேலையில்லாத் திண்டாட்டம்

ஹரியாணாவில் வேறு எந்த வேலையும் கிடைக்காத நிலையில், வேலைகளுக்குச் செல்ல விரும்பும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் இந்த வேலைகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அரசுத்துறை, மாநகராட்சிகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட தூய்மைப் பணியாளருக்கு மாதம் ரூ.15,000 சம்பளமாக கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்கள், சாலைகள், குடியிருப்புக் கட்டடங்களில் இருந்து குப்பைகளை சுத்தம் செய்தல், துடைத்தல், குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளுக்காக பலர் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பதாரர்கள் கருத்து

29 வயதான ராச்சனா தேவி, நர்சரி ஆசிரியர் பயிற்சி முடித்த அவர் தற்போது ராஜஸ்தானில் இருந்து வரலாற்றில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். இவரும் தூய்மைப் பணிக்கு விண்ணப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “எனக்கு வேலை எதுவும் இல்லை. நான் வீட்டில் சும்மா தான் இருக்கிறேன். அதனால், நான் தூய்மைப் பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்தேன்” என்றார்

உதவி செவிலியரான மனிஷாவும், இளங்கலைப் பட்டம் பெற்ற அவரது கணவர் டேனிஷ் குமாரும், தங்களின் நிதி நெருக்கடி காரணமாக தூய்மைப் பணியாளராகவும் வேலை செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

மருந்தகத்தில் முதுகலைப் பட்டதாரியான சுமித் ஷர்மா, உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஜெராக்ஸ் கடை வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் தூய்மைப் பணியாளராகத் தயாராகிவிட்டார்.

இதேபோல ராகுல் தென்வால் என்பவரும் பி.எட் படித்துவிட்டு நூலக அறிவியலில் முதுகலைப் படித்து வருகிறார். ஆனால் வேலையில்லாமல் இருக்கிறார். ஜின்ட்டைச் சேர்ந்த அஜீத் கௌஷிக் 12ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு டிராவல் ஏஜென்டாகப் பணிபுரிகிறார். ஆனால், அவரும் தூய்மைப் பணியாளராக வேலை செய்ய விருப்பமாக உள்ளார். அரசு வேலை பாதுகாப்பாக இருக்கும். இதன் மூலம் எனக்கு திருமணம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் ஊடகச் செயலர் பேச்சு

முதல்வர் நயாப் சைனியின் ஊடகச் செயலாளரும், பாஜக தலைவருமான பிரவீன் அத்ரே கூறுகையில், “ஹரியாணாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஆளும் பாஜக அரசு 1.45 லட்சம் பேருக்கு அரசு வேலைகளை வழங்கியுள்ளது.

மேலும், 37 லட்சம் இளைஞர்களுக்கு சுயதொழில் மற்றும் தனியார் துறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 1.20 லட்சம் பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்

அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மையை மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024