இந்தூரில் பாலியல் வன்கொடுமை: காவல்துறை மெத்தனத்தால் நீதிமன்றத்தை நாடிய பெண்!

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

இந்தூரில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கடந்த ஜூன் 11ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

34 வயது பெண் ஒருவரை 5 பேர் அடங்கிய கும்பல் பெல்டால் தாக்கி பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் பெண்ணை நிர்வாணப்படுத்தி நடனமாட வற்புறுத்தியதாகவும் காவல்துறையில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

ஆனால் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில், அந்த பெண் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தை நாடினார். பெண்ணின் புகாரைப் பரிசீலித்து 90 நாள்களுக்குள் தீர்ப்பளித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனாடியா காவல் நிலையப் பொறுப்பதிகாரிக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, நீதிமன்றம் தீர்ப்பளித்து 19 நாள்களுக்குப் பிறகு காவல் துறையினர் இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் மீது திங்கள்கிழமை நள்ளிரவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக துணை ஆணையர் அபினய் விஸ்வகர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடாமல் கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண் கனாடியா காவல் நிலையத்தில் ஜூலை 17ஆம் தேதி புகார் அளித்திருந்தார், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் அந்த பெண் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் பெஞ்சில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ஆளும் கட்சியுடன் தொடர்புடையவர் என்பதால், காவல்துறை மீது பாஜகவின் அழுத்தம் காரணமாக எஃப்ஐஆர் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நீலாப் சுக்லா தெரிவித்தார்.

காங்கிரஸின் இந்த குற்றச்சாட்டை மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா மறுத்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும், பாஜக ஆட்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்றார்.

பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான வழக்கில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024