பிறந்து 7 நாள்களான குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை: திருச்சியில் இருந்து 2.45 மணி நேரத்தில் கோவை வந்த ஆம்புலன்ஸ்

by rajtamil
Published: Updated: 0 comment 12 views
A+A-
Reset

கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக பிறந்து 7 நாள்களான குழந்தை 2.45 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் இருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்டது.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம் நவகுடியைச் சோ்ந்தவா் திருமுருகன். இவரது மனைவி துா்காதேவி. இவருக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு இதயத்தில் பிரச்னை இருப்பதை மருத்துவா்கள் கண்டறிந்தனா். இதையடுத்து, குழந்தையை உயா் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதைத் தொடா்ந்து, குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு தேவையான நவீன இயந்திரங்கள், உபகரணங்கள் இல்லாததால் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

இதையடுத்து, புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு திருச்சியில் இருந்து குழந்தையை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஆம்புலன்ஸ் 2.45 மணி நேரத்தில் கோவையை வந்தடைந்தது. வரும் வழியில் காவல் துறை உதவியுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதையடுத்து, மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது.

இதுகுறித்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநா் அஸ்வின் கூறுகையில், குழந்தையை விரைவாக கோவை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. காவல் துறை மற்றும் மக்கள் ஒத்துழைப்பால் ஆம்புலன்ஸ் வாகனத்தை எளிதில் 110 கிலோ மீட்டா் வேகத்தில் இயக்க முடிந்தது. இதனால், மூன்றரை மணி நேரத்தில் செல்ல வேண்டிய தூரத்தை இரண்டே முக்கால் மணி நேரத்தில் கடக்க முடிந்தது என்றாா்.

கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவா் கூறுகையில், ‘குழந்தைக்கு இதயத்தில் இருந்து சுத்த ரத்தத்தை உடல் முழுக்க கொண்டு செல்லும் தமணியில் சுருக்கம் உள்ளதால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

You may also like

© RajTamil Network – 2024