1995-ஆம் ஆண்டு திட்ட ஓய்வூதியதாரர்கள் எந்த வங்கி கிளையில் இருந்தும் ஓய்வூதியம் பெறலாம்

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

நமது சிறப்பு நிருபர்

1995-ஆம் ஆண்டு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் (இபிஎஸ்) இணைந்த ஓய்வூதியதாரர்கள் 2025 ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாட்டில் எந்த வங்கியிலும், எந்தக் கிளையிலிருந்தும் ஓய்வூதியத்தைப் பெறலாம் என மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை தெரிவித்தார்.

மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) கீழ் 1995-ஆம் ஆண்டு தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

இபிஎஃப்ஓ-இன் தலைவராக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளார். இபிஎஃப்ஓ-இன் "டிரஸ்ட்'-இன் மத்தியக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதன்பின்னர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியது:

1995-ஆம் ஆண்டு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்துக்கு மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய பட்டுவாடா முறைக்கான (சிபிபிஎஸ்) முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான மையப்படுத்தப்பட்ட புதிய சிபிபிஎஸ் அமைப்பின் மூலம் ஒரு பெரிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நவீனமயமாக்கலில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். இதன் மூலம் ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வூதியத்தைப் பெற நாட்டின் எந்த இடத்திலும் உள்ள எந்தவொரு வங்கியிலிருந்தும், எந்தவொரு கிளையிலிருந்தும் பெற முடியும்.

ஓய்வூதியதாரர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறினாலும் அல்லது தனது வங்கி அல்லது கிளையை மாற்றினாலும் கூட, ஓய்வூதியம் பணம் செலுத்தும் ஆணைகளை ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

இந்த முயற்சியின் மூலம், ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் நீண்டகாலச் சவால்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த வசதி 2025 ஜனவரி 1 முதல் தொடங்கப்படும் என்றார்.

You may also like

© RajTamil Network – 2024