கங்கனாவின் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்துக்கு தொடரும் சிக்கல்!

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் இயக்கி, நடித்த ‘எமா்ஜென்சி’ திரைப்படம் குறித்து தணிக்கை குழுவுக்கு புதிய உத்தரவைப் பிறப்பிக்க மும்பை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டதால் படவெளியீட்டில் தொடா்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

திரைப்படம் குறித்த ஆட்சேபத்தைப் பரிசீலித்து, 18-ஆம் தேதிக்குள் சான்றிதழ் வழங்குமாறு தணிக்கை குழுவுக்கு மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் அவசரநிலை பிரகடனத்தை மையமாகக் கொண்டு ‘எமா்ஜென்சி’ எனும் திரைப்படத்தை பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் இயக்கி, முதன்மைக் கதாபாத்திரமான முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி வேடத்தில் நடித்துள்ளாா்.

‘ஜீ எண்டா்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பா் 6-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், படத்தில் தங்களின் மத உணா்வுகளைப் புண்படுத்தும் வகையிலான காட்சிகள் இருப்பதாக சீக்கிய அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் செவ்வாய்கிழமை விசாரித்தது.

அப்போது, படத்துக்கான தணிக்கைச் சான்றிதழை இன்னும் அளிக்கவில்லை என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தெரிவித்தது. சீக்கியா்களின் ஆட்சேபத்தைப் பரிசீலித்து செப்டம்பா் 18-ஆம் தேதிக்குள் சான்றிதழை அளிக்குமாறு மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், திரைப்படத்துக்குச் தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி மும்பை உயா்நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனமும், கங்கனா ரணாவதும் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்தப் படத்தின் தயாரிப்பாளா்களுக்கு இணையவழியில் சான்றிதழ் வழங்கியும், வாரியத் தலைவா் கையொப்பமிடாததால் அச்சான்றிதழ் ஏற்புடையதல்லை எனும் தணிக்கை குழுவின் வாதம் தவறானது என்று கூறினா். எனினும், இவ்விவகாரத்தில் மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணாக தணிக்கை குழுவுக்கு புதிய உத்தரவைப் பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனா்.

இலக்காகி விட்டேன்…: உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து கங்கனா ரணாவத் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இன்று நான் அனைவரின் எளிய இலக்கு ஆகிவிட்டேன், உறங்கும் தேசத்தை தட்டிஎழுப்பியதற்கு எனக்கு கிடைத்த பரிசுஇதுதான். நான் என்ன பேசுகிறேன் என்றும் நான் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறேன் என்றும் அவா்களுக்கு தெரியாது’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

You may also like

© RajTamil Network – 2024