மகள் சடலத்தின் முன் பேரம் பேசிய போலீஸ்! கொல்கத்தா மருத்துவரின் பெற்றோர் குற்றச்சாட்டு!

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

வீட்டில் மகளின் சடலத்தின் முன்பு அழுது கொண்டிருக்கும்போது காவல்துறை அதிகாரி பணம் கொடுப்பதாக பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொல்கத்தாவில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மருத்துவ சங்கத்தினரின் போராட்டத்தில் கலந்து கொண்ட கொலை செய்யப்பட்ட மருத்துவரின் பெற்றோர் இதனைத் தெரிவித்தனர்.

பயிற்சி மருத்துவர் கொலை

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் கடந்த மாதம் இரவுப் பணியில் இருந்த முதுநிலை மருத்துவம் படிக்கும் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்த நிலையில், காவல்துறை சார்பில் மருத்துவமனையில் தன்னார்வலராக பணியில் இருந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.

தற்போது பயிற்சி மருத்துவ மாணவியின் கொலை வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மேற்கு வங்க அரசுக்கும் காவல்துறைக்கும் எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கோட் டிக்கெட் விலை ரூ. 2,000?

பெற்றோரிடம் போலீஸ் பேரம்

கொல்கத்தாவில் ஜூனியர் மருத்துவர்கள் முன்னணி சார்பில் புதன்கிழமை இரவு முக்கிய சாலைகளில் விளக்குகளை அனைத்து போராட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு முக்கிய சாலைகளில் பேரணியும் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில், ஆர்.ஜி. கர் மருத்துவமனை மருத்துவர்கள், கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரின் பெற்றோர்கள், உறவினர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது, பிரேத பரிசோதனை முடிந்து தங்கள் மகளின் உடலை உடனடியாக தகனம் செய்வதில் மேற்கு வங்க காவல்துறையினர் மும்முரமாக இருந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

மேலும், செய்தியாளர்களுடன் பேசிய கொலை செய்யப்பட்ட மருத்துவரின் உறவினர் பேசியதாவது:

“இறுதிச் சடங்கு முடியும் வரை 300 முதல் 400 போலீசார் எங்களை சுற்றியும் இருந்தனர். அதன்பின்னர், ஒருவர்கூட எங்களுடன் இல்லை. நாங்கள் எப்படி வீட்டுக்கு போவோம் என்று அவர்கள் சிந்திக்கவில்லை. இறுதிச் சடங்கு வரை சுறுசுறுப்பாக செயல்பட்ட காவலர்கள், அதன்பிறகு செயலிழந்துவிட்டனர்.

மகளின் சடலத்தை வீட்டின் நடுவே வைத்து பெற்றோர்கள் அழுது கொண்டிருக்கும் போது, போலீஸ் அதிகாரி ஒருவர் பணம் தருவது குறித்து பேரம் பேசினார். இதுதான் போலீஸின் மனிதாபிமானமா? எங்கள் தரப்பில் எல்லா கடமைகளையும் செய்துவிட்டோம் எனக் கூறும் காவல்துறையினரின் கடமை இதுதானா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொல்கத்தா சம்பவம்: சந்தீப் கோஷுக்கு 8 நாள்கள் சிபிஐ காவல்

மருத்துவமனை முதல்வர் கைது

மாணவியின் கொலை வழக்கில் தொடர்ந்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு வந்த கல்லூரியின் முதல்வர் சந்தீப் கோஷை, நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிஐ கைது செய்துள்ளனர்.

மேலும், மருத்துவமனையில் முறைகேடாக மருந்துகளை ஏற்றுமதி செய்து, தரம் குறைவான மருந்துகளை நோயாளிகளுக்கு அளித்ததாகவும், அதனை கண்டுபிடித்ததால்தான் மாணவி கொலை செய்யப்பட்டதாகவும் பாஜக தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் கொல்கத்தா காவல் ஆணையரிடமும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, போலீஸார் பணம் கொடுக்க முயற்சித்ததாக பயிற்சி மருத்துவரின் பெற்றோர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ள நிலையில், எதை மறைக்க பணம் கொடுக்க முயற்சித்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024