Tuesday, September 24, 2024

தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

தமிழ்நாடு மின்வாரியத்தை லாபத்தில் இயக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைக்கப்பட்ட வடசென்னை அதி உய்ய அனல் மின்நிலையம்-3, அதன்பின் 6 மாதங்களாகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. மக்களவைத் தேர்தலுக்கு முன் அவசர, அவசரமாக திறக்கப்பட்ட அனல் மின்நிலையத்தில் நிலக்கரியை பயன்படுத்துவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட செய்யப்படாததுதான் வடசென்னை அதி உய்ய அனல் மின்நிலையம்-3 திறக்கப்பட்டும் நீண்ட நாளாகியும் முடங்கிக் கிடப்பதற்கு காரணம் ஆகும்.

ஓர் அனல் மின்நிலையம் செயல்படுவதற்கான அடிப்படை தேவை அதற்கான எரிபொருள். நிலக்கரியை எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலம்தான் குறைந்த செலவில் மின்சாரத்தைத் தயாரிக்க முடியும். அதைக் கருத்தில் கொண்டுதான் அதி உய்ய நிலை வெப்ப தொழில்நுட்பத்துடன் இந்த அனல் மின் நிலையம் உருவாக்கப்பட்டது. பிற அனல் மின் நிலையங்களை ஒப்பிடும்போது இது 6% வரை அதிக திறன்மிக்கது; அதனால் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய 0.45 கிலோ நிலக்கரி மட்டுமே தேவைப்படுவதால் ஒரு யூனிட்டுக்கான உற்பத்திச் செலவு ரூ. 6 ஆக இருக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால், வடசென்னை அனல்மின் நிலையம்- 3 தொடங்கப்பட்டு 6 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், நிலக்கரியை கையாள்வதற்கான தளம், நிலக்கரியை மின்நிலையத்திற்கு கொண்டு வருவதற்கான கன்வேயர் பெல்ட், எரிக்கப்பட்ட நிலக்கரியின் சாம்பல் வெளியில் பரவாமல் தடுப்பதற்கான சேமிப்புக்குளம் கட்டப்படவில்லை. அதனால், நிலக்கரியை பயன்படுத்துவதற்கு பதிலாக திரவ எரிபொருளை பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. அதனால், ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.13 செலவாகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மின்னுற்பத்தி நிலையங்களில் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய சராசரியாக ரூ.3, 4 மட்டுமே செலவாகிறது. ஆனால், வடசென்னை அனல்மின்நிலையத்தின் திட்ட மதிப்பீடு இரு மடங்கிற்கும் மேலாகி விட்டதால், அதில் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ரூ.6-க்கும் கூடுதலாக செலவாகிறது. இவ்வாறாக மின்னுற்பத்தி நிலையங்களின் கட்டுமானத்தை திட்டமிட்டு தாமதப்படுத்துதல், அதிக விலை கொடுத்து வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குதல் ஆகியவற்றால்தான் மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது.

மின்வாரியத்தின் மொத்த இழப்பு ரூ.2 லட்சம் கோடியை நெருங்கும் நிலையிலும் தமிழக அரசும், மின்சார வாரியமும் மாறாமல், அதே அலட்சியத்துடனும், ஊழலுக்கு இடம் கொடுக்கும் வகையிலும் செயல்பட்டால் மின்சார வாரியம் இப்போதைக்கு லாபம் ஈட்ட முடியாது. மின்சாரக் கட்டண உயர்வு என்ற பெயரில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது தான் சுமைகள் சுமத்தப்படும்.

எனவே, தமிழக அரசும், மின்சார வாரியமும் நிலுவையில் உள்ள மின்திட்டங்களை இனியாவது இலக்கு வைத்து நிறைவேற்ற வேண்டும்; தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும். அதன் மூலம் தமிழ்நாடு மின்வாரியத்தை லாபத்தில் இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024