டெல்லி காலேஜ் விடுதியில் சடலமாக கிடந்த தமிழக மாணவி: தற்கொலை கடிதம் சிக்கியது

by rajtamil
Published: Updated: 0 comment 9 views
A+A-
Reset

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு எல்.எல்.பி. பயின்று வந்த தமிழக மாணவி அமிர்தவர்ஷினி. இவர் பல்கலைகழக விடுதியில் தங்கி படித்து வந்தநிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டார். மேலும் மாணவியின் அறையில் இருந்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் டி.ஜி.பி. துவாரகா நிஷாந்த் குப்தா, "சென்னையைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார். அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின், அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும். இது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்படும். கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த மாணவி அவரது நண்பர்களிடம் தனக்கு ஏற்பட்ட தற்கொலை எண்ணங்கள் பற்றி பேசியிருக்கிறார். அப்போது அவரது நண்பர்கள் மாணவியை சொந்த ஊரான சென்னைக்கு ஒரு வாரம் அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மாணவியின் தற்கொலை கடிதத்தில், நான் தற்கொலை செய்து கொண்டதற்கு யாரும் காரணம் இல்லை. இப்படியான ஒரு முடிவு எடுத்ததற்கு பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், "எங்கள் பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரிய இழப்பு. வருத்தத்தைத்தெரிவித்து கொள்கிறோம். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருக்கு இடர் காலத்தில் எங்கள் இரங்கலை தெரிவிக்கிறோம். மாணவர்களின் நலனை பாதுகாப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாணவி படிப்பு சம்பந்தமாக ஒரு வித பதற்றத்தில் இருந்ததாக சக மாணவிகள் தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த மாணவியை கடந்த ஏப்ரல் மாதம் வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர் ஒரு வாரத்திற்கு பின் டெல்லிக்கு அனுப்பி இருந்தநிலையில் மாணவி தற்போது உயிரிழந்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024