Friday, September 20, 2024

பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டது ஏன்? 3 காரணங்களைக் கூறும் ராகுல்

by rajtamil
Published: Updated: 0 comment 12 views
A+A-
Reset

சத்ரபதி சிவாஜியிடமல்ல, மகாராஷ்டிரத்தை சேர்ந்த அனைத்து மக்களிடமும் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று (செப். 5) தெரிவித்தார்.

கடந்த மாதம் சிலை உடைந்து விழுந்த விவகாரத்தில், தாங்கள் கடவுளாக நினைக்கும் சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார்.

இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம்

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலி பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது,

''சிந்துதுர்க் மாவட்டத்தின் மால்வன் பகுதியில் நிறுவப்பட்டிருந்த சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்த விவகாரத்தில், சிலையிடமல்ல, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அனைத்து மக்களிடமும் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.

தவறுகளை செய்துவிட்டு மன்னிப்பு கேட்கும் ஒரே நபர் அவர்தான் (மோடி). பிரதமர் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? அதற்கு பல காரணங்கள் உண்டு. முதல் காரணம், ஆர்.எஸ்.எஸ். சார்ந்த மக்களுக்கு ஒப்பந்தம் கொடுத்தது. இரண்டாவது – சிலை கட்டுமானத்தில் ஊழல் செய்தது, மூன்றாவது – சத்ரபதி சிவாஜியைப் போன்ற மரியாதைக்குரியவருக்கு சிலை வைத்து அதனை பராமரிக்காமல் அவமதித்தது. இதுபோன்ற காரணங்களால்தான் சத்ரபதி சிவாஜி சிலை, ஒருசில மாதங்களிலேயே உடைந்தது.

காரணம் எதுவாக இருந்தாலும், பிரதமரும் பாஜகவும் சத்ரபதி சிவாஜியுடன் சேர்ந்து ஒட்டுமொத்த மகாராஷ்டிரத்தின் ஒவ்வொரு குடிமகனிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.

வளர்ச்சிக்கு எதிரானது பாஜக கொள்கை

மேலும், ''மகாராஷ்டிரத்தில் சத்ரபதி சிவாஜி, ராஜர்ஷி சத்ரபதி சாஹு மகாராஜா, மகாத்மா ஜோதிராதித்ய பூலே, பி.ஆர். அம்பேத்கர் வழியில் மகாராஷ்டிரத்தின் முன்னேற்றத்துக்கான கருத்தியலை காங்கிரஸ் முன்னெடுக்கிறது. தற்போது நடப்பது அரசியல் அல்ல, கருத்தியல் போர். மகாராஷ்டிரத்தை வழிநடத்திய தலைவர்களின் கருத்தியலோடு ஒத்துப்போவது காங்கிரஸின் கொள்கை. ஆனால், அத்தகைய பெருந்தகைகளின் கருத்தியலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது பாஜக கொள்கை.

நாடு முழுவதும் வெறுப்புணர்வையும், வன்முறையையும் விதைத்து மக்களை பிளவுபடுத்துகிறது பாஜக. காங்கிரஸ் அதற்கு எதிராக போராடி வருகிறது.

நாட்டின் வளங்களும் வளர்ச்சித் திட்டங்களும் தகுதியானவர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காக, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், பாஜக அதனை நிராகரித்து வந்தது.

பெரும் போராட்டத்துக்குப் பிறகே தற்போது ஒருமனதாக அதற்கு பாஜக ஒப்புக்கொண்டுள்ளது. எந்த சூழ்நிலை வந்தாலும், காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் கட்டாயம் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் என உறுதியளிக்கிறேன்'' என ராகுல் காந்தி பேசினார்.

You may also like

© RajTamil Network – 2024