சென்னை – வேளச்சேரி ரயில் நிலையத்தில் மூடப்பட்ட உணவகத்தை திறப்பது எப்போது?

by rajtamil
Published: Updated: 0 comment 18 views
A+A-
Reset

சென்னை – வேளச்சேரி ரயில் நிலையத்தில் மூடப்பட்ட உணவகத்தை திறப்பது எப்போது?

சென்னை மின்சார ரயில் போக்குவரத்தில் கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடம் முக்கியத் தடமாகும். சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், பறக்கும் ரயில் வேளச்சேரியில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை வரை இயக்கப்படுகிறது.

தற்போது இந்த வழித்தடத்தில் நாள்தோறும் 80 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரை வரை ரயில் சென்று வந்தபோது தினசரி 150 ரயில் சேவை இயங்கின. இதற்கிடையே வேளச்சேரியை சுற்றியுள்ள மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், கீழ்க்கட்டளை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மின்சார ரயிலில் பயணம் செய்கின்றனர்.

இந்த ரயில் நிலையத்தில் செயல்பட்டு வந்த உணவகத்தின் ஒப்பந்தம் முடிவடைந்ததால் அது சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. அதன்பின்னர் புதிய உணவகம் எதுவும் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் வேளச்சேரிக்கு வரும் ரயில் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.

இதுகுறித்து வேளச்சேரியை சேர்ந்த பயணிகள் சிலர் கூறியதாவது: வேளச்சேரி ரயில் நிலையத்தில் தற்போது உணவகம் இல்லாததால் சிரமமாக உள்ளது. தினமும் அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும்போது அந்த உணவகத்தில் காலை சிற்றுண்டி உணவை பலர் சாப்பிட்டுவிட்டு செல்வர். தற்போது கடை இல்லாததால் வெளிப்புற கடைகளை தேடி செல்ல வேண்டியுள்ளது. அதேநேரம் ரயில் நிலையம் அருகே வேறு கடைகள் இல்லை.

ஒரு தனியார் பன்னடக்கு உணவகம் (புட் கோர்ட்) மட்டுமே உள்ளது. அதுவும் மாலை வேளையில்தான் முழுமையாக செயல்படுகிறது. எனினும், அங்கு விலை அதிகமாக இருப்பதால் சாதாரண மக்களால் அந்த கடைகளில் சென்று சாப்பிட முடியாது. ஒரு காபி, டீ குடிக்க கூட ஒரு கி.மீ தூரம் செல்ல வேண்டியுள்ளது.

ஒரு மணி நேரத்துக்கு 3 ரயில்கள்தான் இயக்கப்படுகின்றன. ஒரு ரயிலை தவறவிட்டால் 20 முதல் 25 நிமிடம் வரை அடுத்த ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். உணவகம் இருந்தால் டீ, ஜூஸ் உள்ளிட்ட பானங்களை அருந்தி சற்று இளைப்பாறலாம். ஆனால், ரயில் நிலையத்தில் வைக்கப்படும் குடிநீர்கூட சுகாதாரமானதாக இருப்பதில்லை. தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையத்தில் ஒரு சிற்றுண்டி கடையேனும் திறக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, “வேளச்சேரி ரயில் நிலையத்தில் புதிய உணவகம் அமைப்பதற்கான டெண்டர் வெளியிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பயணிகளின் தேவையை உணர்ந்து விரைவில் உணவகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும்” என்றனர்

You may also like

© RajTamil Network – 2024