Tuesday, September 24, 2024

அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: மறு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை!

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

புதுதில்லி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, கீழமை நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சராக இருந்தாா் கே.கே.எஸ்.ஆா்.ராமச்சந்திரன். இவரும் இவரது மனைவி ஆதிலட்சுமி, மற்றும் நண்பா் கே.எஸ்.பி. சண்முகமூா்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வருமானத்திற்கு அதிகமாக ரூ.44, 56, 067 அளவிற்கு கூடுதலாக சொத்து சோ்த்ததாக தமிழக லஞ்ச ஊழல் தடுப்புத் துறை அதிமுக ஆட்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்திருந்தது. ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், இருந்த இந்த வழக்கில் தங்களை விடுவிக்க கோரி கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் உள்ளிட்டோா் மனு தாக்கல் செய்ய ஸ்ரீவில்லுபுத்தூா் நீதிமன்றம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி விடுவித்து உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் மாநில லஞ்ச ஊழல் தடுப்புத் துறை தரப்பு மேல்முறையீடு செய்யாததால் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாகவே முன்வந்து இந்த விடுவிப்பு குறித்த வழக்கை விசாரித்தாா்.

அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் வழக்கு மட்டுமல்ல இதே போன்று விடுதலையான அமைச்சா் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக (ரூ.76.40 லட்சம்) சொத்துக்குவித்தாக வழக்கையும் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. இந்த இரு அமைச்சா்களும் விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து மீண்டும் வழக்கை விரைவாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் கடந்த 7 ஆம் தேதி உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ரயில்வே பணியிலிருந்து ராஜிநாமா செய்த வினேஷ் போகத்! காங்கிரஸில் இணைகிறாரா?

இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கை, கீழமை நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து அளித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் உயர்நீதிமன்றப் பதிவாளர் ஆகியோர் நான்கு வாரங்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாகவே முன்வந்து எடுத்த விவகாரத்திற்கு தடை கோரிவந்தாா். ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உயா்நீதிமன்ற நீதிபதியை பாராட்டியதோடு, இந்த விவகாரத்தை சென்னை தலைமை நீதிபதி முன்பு முறையிடவும் கோரி அப்போது மனுவை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024