Friday, September 20, 2024

மத்திய மந்திரி சபையில் ஒரே ஒரு இடம் தானா? சிவசேனா அதிருப்தி

by rajtamil
0 comment 25 views
A+A-
Reset

புனே,

மத்திய கூட்டணி அரசில் சிவசேனாவுக்கு ஒரே ஒரு மத்திய மந்திரி பதவி, அதுவும் இணை மந்திரி பதவி வழங்கப்பட்டதால் சிவசேனா அதிருப்தியை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று 3-வது முறையாக பதவி ஏற்றார்.

இதில் மராட்டியத்தை சேர்ந்த 6 பேருக்கு மந்திரி சபையில் இடம் அளிக்கப்பட்டது. இதில் பா.ஜனதாவை சேர்ந்த 4 பேர், சிவசேனா மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த தலா ஒருவர் மந்திரி பதவி ஏற்றனர். மற்றொரு கூட்டணி கட்சியான அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்தில் வெற்றி பெற்றதால் அந்த கட்சிக்கு இணை மந்திரி பதவி வழங்க பிரதமர் மோடி முன்வந்தார். ஆனால் இணை மந்திரி பதவியை ஏற்க தேசியவாத காங்கிரஸ் மறுத்து விட்டது.

அந்த கட்சியை தொடர்ந்து சிவசேனாவும் தனது அதிருப்தியை வெளியிட்டு உள்ளது. 7 தொகுதிகளில் வெற்றி பெற்ற அந்த கட்சிக்கு ஒரே ஒரு மந்திரி பதவி தான் வழங்கப்பட்டது. அதுவும் கேபினட் அந்தஸ்துடன் கூடிய பதவி வழங்காமல் தனிப்பொறுப்புடன் கூடிய இணை மந்திரி பதவி தான் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக சிவசேனாவை சேர்ந்த ஸ்ரீரங் பர்னே எம்.பி. அதிருப்தியை வெளிப்படுத்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளத்தை அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் தான் 3-வது பெரிய கட்சியாக உள்ளோம். எனவே எங்களுக்கு குறைந்தது ஒரு கேபினட் மற்றும் ஒரு இணை மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஒரு இணை மந்திரி பதவி மட்டும் தான் வழங்கப்பட்டு உள்ளது. 2 இடங்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு கூட கேபினட் மந்திரி பதவிகள் கிடைத்தன.

உதாரணமாக 2 எம்.பி.க்களை மட்டுமே வைத்துள்ள குமாரசாமி தலைமையிலான ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு மந்திரிசபையில் கேபினட் இடம் கிடைத்தது. அதேபோல பீகாரில் ஒரு இடத்தில் வெற்றி பெற்ற ஜித்தன் ராம் மஞ்ஜிக்கும் கேபினட் மந்திரி பதவி கிடைத்துள்ளது.

சிவசேனாவுக்கு பாரபட்சம் காட்டப்பட்டதாக தனிப்பட்ட முறையில் நான் உணர்கிறேன். முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் தைரியமான நடவடிக்கை தான் மராட்டியத்தில் அதிகார மாற்றத்திற்கு வழிவகுத்தது. இந்த அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு பா.ஜனதாவிடம் இருந்து நியாயமான நிலைப்பாட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் மகனும், எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே கூறுகையில், "நாட்டுக்கு பிரதமர் மோடியின் தலைமை தேவை என்பதால் நாங்கள் எந்தவித நிபந்தனையும் இன்றி அரசுக்கு ஆதரவு அளித்துள்ளோம். இதனால் மந்திரி பதவி கேட்டு பேரம் பேசவில்லை. கொள்கை ரீதியாக அரசுக்கு ஆதரவு அளித்து உள்ளோம்" என்றார்.

You may also like

© RajTamil Network – 2024