சர்ச்சை பேச்சு: இன்று நேரில் விளக்கம் அளிக்கிறார் மகாவிஷ்ணு

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் விளக்கம் அளிக்க உள்ளதாக மகா விஷ்ணு தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த சொற்பொழிவில் மகா விஷ்ணு என்பவர் பாவ – புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மேலும் முன்ஜென்ம தவறுகளால் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என பேசிய மகா விஷ்ணுவின் பேச்சை பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் கண்டித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து ஆசிரியரை மகா விஷ்ணு மரியாதை குறைவாக பேசியுள்ளார். மகா விஷ்ணு பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.இந்த நிலையில், அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக அப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் விசாரணைக் குழு நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் தன்னுடைய எக்ஸ் வலை பக்கத்தில், "பள்ளி வளாகம் என்பது ஆசிரியர்களுக்கானது. நமது மாணவச் செல்வங்களுக்கானது. நமது பள்ளிக்குள் நுழைந்து மாணவர்களிடம் உரையாடுபவர்களின் பின்புலத்தை ஆராய வேண்டிய கடமை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உண்டு. எந்தவொரு கருத்தையும் அறிவியல் ரீதியாக பகுத்தறிந்து சிந்திக்க வேண்டும் என்பதை நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். கல்வியால் உலகை வெல்வோம். அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம். கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய மிகப்பெரிய ஆயுதம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை பள்ளி நிகழ்ச்சியில் பேசிய சொற்பொழிவு சர்ச்சையான நிலையில், பேச்சாளர் மகாவிஷ்ணு நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், "

கடமைகள் இருந்ததால், அசோக் நகர் பள்ளி, சைதாப்பேட்டை பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அடுத்த நாளே ஆஸ்திரேலியா வந்துவிட்டேன். இதில் ஓடி ஒளிவதற்கான விஷயமே கிடையாது. எதற்காக நான் ஓடி ஒளிய வேண்டும். ஓடி ஒளியும் வகையில் நான் என்ன தவறான கருத்தை சொல்லிவிட்டேன்.

சைதாபேட்டை போலீஸ் நிலையத்தில் என் மீது மாற்றுத்திறனாளிகள் பலர் புகார் கொடுத்துள்ளார்கள். பரம்பொருள் பவுண்டேஷன் அலுவலகத்திலும், திருப்பூரில் உள்ள என் இல்லத்திலும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளார்கள். போலீசார் அவர்கள் பணியை சரியாக செய்கிறார்கள். இந்த சூழலில், நான் தமிழகத்தில் இருக்க வேண்டும். இதற்கான விளக்கத்தையும் கொடுக்க நான் தயாராக உள்ளேன். இன்று (சனிக்கிழமை) மதியம் 1.10 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறேன். இந்திய சட்டத்தின் மீதும், தமிழக போலீசார் மீதும் எனக்கு மதிப்பு உள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி என்னை பற்றி அதிகம் பேசி இருந்தார். என் மீது ஒரு குற்றச்சாட்டு வந்துள்ளது. அதற்கு விளக்கம் கொடுக்க தமிழகத்தில் இருக்க வேண்டும். இறைவனிடம் சரணாகதி செய்து நேரடியாக உங்களை சந்திக்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக, சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள பள்ளியில் விசாரணை நடத்திய பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், இந்த விவகாரம் தொடர்பாக வரும் திங்கட்கிழமை அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024