Monday, September 23, 2024

தமிழக வெற்றிக்கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்: விஜய் அறிவிப்பு

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது என விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது. தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம்.

அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது. இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது.

இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள். தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம்! வாகை சூடுவோம்!" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024