Monday, September 23, 2024

ஆதாரங்களை அழிக்க முயன்ற போலீஸ்! கொல்கத்தா மருத்துவரின் பெற்றோர்

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

தங்களின் மகள் கொலை செய்யப்பட்டது முதலே கொல்கத்தா காவல்துறையினர் ஆதாரங்களை அழிக்க முயற்சித்ததாக மருத்துவரின் பெற்றோர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

மேலும், கொல்கத்தா காவல்துறையும், மேற்கு வங்க அரசு தொடக்கம் முதலே எவ்வித ஒத்துழைப்பும் தரவில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

மாணவர்களின் தொடர் போராட்டம்

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை கண்டித்து, நாடு முழுவதும் ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த வழக்கை சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று காலை விசாரணை நடைபெறவுள்ளது.

ஆர். ஜி. கர் மருத்துவமனையைச் சேர்ந்த இளம் மருத்துவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஞாயிற்றுக்கிழமை மாலை, மனிதச்சங்கிலிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். தங்கள் கைகளை கோர்த்துக்கொண்டு, தேசியக்கொடியை ஏந்தியபடி அவர்கள் தேசிய கீதத்தை பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் எஸ்எஃப்ஐ மற்றும் டிஒய்எஃப்ஐ அமைப்பைச் சேர்ந்தோர் பலரும் இணைந்து மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொல்கத்தா மட்டுமன்றி மேற்கு வங்கத்தின் பிற பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.

பெற்றோரின் குற்றச்சாட்டு

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட கொல்லப்பட்ட மருத்துவரின் பெற்றோர் கூறியதாவது:

“எங்கள் மகள் வழக்கு தொடங்கியதில் இருந்தே மாநில அரசு, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. காவல்துறையினர் ஆரம்பத்தில் இருந்தே ஆதாரங்களை அழிக்க முயன்றனர். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை மக்களின் போராட்டம் தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அனைவரும் எங்களுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நீதி அவ்வளவு எளிதில் கிடைக்காது என்று தெரியும். நீதியை உறுதி செய்ய வேண்டும். எங்களுடன் மக்கள் இறுதிவரை இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

எனக்கு ஒரேயொரு குழந்தை இருப்பதாகவே நினைத்தேன். ஆனால், இப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து மருத்துவர்களையும் எனது குழந்தைகளைப் போன்றே கருதுகிறேன்” எனத் தெரிவித்தனர்.

பேரம் பேசிய காவல்துறை

கடந்த வாரம் நடைபெற்ற பேரணியின் கலந்து கொண்ட கொல்லப்பட்ட மருத்துவரின் பெற்றோர், தங்கள் மகளின் பிணத்தை வீட்டில் வைத்து அழுதுக் கொண்டிருந்த போது, முதல் தகவல் அறிக்கையை பதியாமல், பணம் தருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் பேசியதாக குற்றச்சாட்டு எழுப்பியிருந்தனர்.

மேலும், தங்கள் மகளின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய திட்டமிட்டு, பிணத்தை பதப்படுத்த முயற்சித்த நிலையில், 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு உடனடியாக தகனம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தங்களை தள்ளியதாக தெரிவித்திருந்தனர்.

You may also like

© RajTamil Network – 2024