Monday, September 23, 2024

“ஒரே நாளில் 6 படுகொலைகள்… சட்டம் – ஒழுங்கு அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது’’ – தினகரன்

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

“ஒரே நாளில் 6 படுகொலைகள்… சட்டம் – ஒழுங்கு அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது’’ – தினகரன்

சென்னை: "தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 6 படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. சட்டம் – ஒழுங்கை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றிருக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், கோவையில் கூலித் தொழிலாளி, ராமநாதபுரத்தில் ஜாமீனில் வெளிவந்தவர் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழகத்தில் சாதாரண பொதுமக்கள் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் வரை கூலிப்படைகள் மற்றும் அடையாளம் தெரியாத கும்பல்கள் மூலம் திட்டமிட்டு கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவோடு தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் தாராளமாக புழங்கிக் கொண்டிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த தவறியதன் விளைவே இதுபோன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் அரங்கேற முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அமைதிப்பூங்காவாக திகழந்த தமிழகத்தில் தற்போது நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் பொதுமக்களுக்கு மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியிருப்பதோடு திமுக அரசின் நிர்வாகத் தோல்வியையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. எனவே, தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை சீர் செய்வதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024