Monday, September 23, 2024

சென்னையை தொடர்ந்து மதுரை, நெல்லை, கோவையிலும் விரைவில் கல்லீரல் மாற்று சிகிச்சை: அமைச்சர் தகவல்

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

சென்னையை தொடர்ந்து மதுரை, நெல்லை, கோவையிலும் விரைவில் கல்லீரல் மாற்று சிகிச்சை: அமைச்சர் தகவல்

சென்னை: மதுரை, நெல்லை, கோவை அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் விரைவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசுபொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பல்லாவரத்தை சேர்ந்த முரளி (59) என்பவரது உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதையடுத்து, அவரது உடலுக்கு அரசு சார்பில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்மரியாதை செலுத்தினார். மருத்துவமனை டீன் தேரணிராஜன், தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) இப்ராகிம்மற்றும் மருத்துவர்கள், செவிலியர்களும் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023 டிசம்பர் 23-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி, உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களிலும் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துவருகின்றனர். தற்போது, மூளைச்சாவு அடைந்து உறுப்புகளை தானமாக வழங்கியுள்ள 250-வது நபரின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த 250 பேரிடம் இருந்து 68 இதயம், 77 நுரையீரல், 193 கல்லீரல், 417 சிறுநீரகம், 2 கணையம், 6 சிறுகுடல், 3 கைகள் என மொத்தம் 1,330 உறுப்புகள் தானம் பெற்றப்பட்டு, பலரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் திட்டம் கடந்த 2008-ல் தொடங்கப்பட்டது. இதுவரை மூளைச்சாவு அடைந்த 1,976 பேர் உறுப்பு தானம் செய்துள்ளனர். அதேநேரம், சிறுநீரகம் 7,137, கல்லீரல் 401, இதயம் 87, கணையம் 4, நுரையீரல் 51, இதயம் – நுரையீரல் 23, கைகள் 25, சிறுகுடல் 3, சிறுநீரகம் – கல்லீரல் 37, சிறுநீரகம் – கணையம் 45 என மொத்தம் 7,815 பேர் உறுப்புகள் வேண்டி பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில் மட்டுமே கல்லீரல் மாற்றுஅறுவை கிசிச்சை செய்யப்பட்டு வந்தது. தற்போது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. வரும் ஆண்டுகளில், திருநெல்வேலி, மதுரை, கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் இதற்கான உரிமங்கள் பெறப்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024