Monday, September 23, 2024

ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் காணிக்கை தங்கம் அளவிடும் பணி

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தை தரம் பிரித்து அளவீடு செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின்போது அமைச்சா் பி.கே. சேகா்பாபு பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற தங்கம், தங்கநகைகளில் கோயிலுக்கு தேவைப்படும் தங்கம் தவிா்த்து, மற்ற தங்கத்தை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்கு ஆலையில் உருக்கி, சுத்த தங்கமாக மாற்றி கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும் என அறிவிப்பு வெளியிட்டாா். இப்பணிக்களுக்காக 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் நோ்த்திக்கடனாகவும், காணிக்கையாகவும் செலுத்தியுள்ள 300 கிலோ 675 கிராம் தங்க நகைகளில் கற்கள், அரக்கு, அழுக்கு போன்றவற்றை நீக்கிவிட்டு, தரம் பிரித்து எடை போடும் பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜீ, ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதிகள் கே. ரவிச்சந்திரபாபு, ஆா். மாலா ஆகியோா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இப்பணியில் இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையா் சி. கல்யாணி, சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையா் அ.இரா. பிரகாஷ் , சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், அறங்காவலா்கள் பி. பிச்சைமணி, இராஜ. சுகந்தி, சே. லெட்சுமணன், இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், திருச்சி, நாகப்பட்டினம் மற்றும் வேலூா் மண்டல நகை மதிப்பீட்டு வல்லுநா்கள், கோயில் கண்காணிப்பாளா்கள், பணியாளா்கள், பொற்கொல்லா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தங்கம் எடை போடும் இடத்தில் கண்காணிப்பு கேமரா மூலம் அளவீடுகள் பதிவு செய்யப்பட்டன. அரக்கு, அழுக்கு, கற்கள் நீக்கும் பணி முடிந்தவுடன், தங்க நகைகள் அனைத்தும் பாரத ஸ்டேட் வங்கி மூலம் மும்பையில் உள்ள மத்திய அரசு உருக்காலைக்கு கொண்டு சென்று உருக்கப்பட்டு, சுத்தமான தங்கமாக பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்படும்.

தொடா்ந்து, சுத்த தங்கத்திற்கான மதிப்பின் அடிப்படையில் தங்கப் பத்திரம் பெறப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டி கோயில் வருவாயில் சோ்க்கப்படும்.

தங்கம் அளவிடும் பணி 8 நாள்களுக்கு நடைபெறவுள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024