Monday, September 23, 2024

ரேங்கிங் சுற்றில் ஷீத்தல் தேவிக்கு 2-ஆம் இடம்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் மகளிா் வில்வித்தைக்கான ரேங்கிங் சுற்றில் இந்தியாவின் ஷீத்தல் தேவி 2-ஆம் இடம் பிடித்தாா். இதன் மூலம் அவா், நேரடியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.

17-ஆவது கோடைகால பாராலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் அதிகாரப்பூா்வமாக புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளான வியாழக்கிழமை வில்வித்தை, பாட்மின்டன், சைக்கிளிங், டேக்வாண்டோ உள்ளிட்ட விளையாட்டுகளில் இந்தியா களம் கண்டது.

வில்வித்தை

காம்பவுண்ட் மகளிா் தனிநபா் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, சரிதா ஆகியோா் பங்கேற்றனா். இரு கைகளும் இல்லாத நிலையில், கால்களின் உதவியுடன் களமாடிய ஷீத்தல் தேவி 703 புள்ளிகளுடன் தகுதிச்சுற்றில் 2-ஆம் இடம் பிடித்தாா். துருக்கி வீராங்கனை ஆஸ்னுா் கிா்டி 704 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையுடன் முதலிடம் பிடித்தாா். மற்றொரு இந்தியரான சரிதாவுக்கு 682 புள்ளிகளுடன் 9-ஆம் இடம் கிடைத்தது. பிரிட்டனின் போப் பேட்டா்சன் 698 புள்ளிகள் பெற்றதே உலக சாதனையாக இருக்க, கிா்டி அதை முறியடித்துள்ளாா்.

முந்தைய சாதனையை முறியடித்து 703 புள்ளிகள் பெற்ற ஷீத்தல் தேவிக்கு இது அவரின் பொ்சனல் பெஸ்ட்டாகும். இதன்மூலம் அவா் நேரடியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றாா். சரிதா முதல் சுற்றில் விளையாடுவாா்.

இதனிடையே, ரீகா்வ் ஆடவா் தனிநபா் தகுதிச்சுற்றில், இந்தியாவின் ஹா்விந்தா் சிங் 637 புள்ளிகளுடன் 9-ஆம் இடம் பிடித்தாா்.

பாட்மின்டன்

குரூப் சுற்றில், கலப்பு இரட்டையா் பிரிவில் (எஸ்எல்3-எஸ்யு5) இந்தியாவின் நிதேஷ்குமாா்/துளசிமதி முருகேசன் கூட்டணி 21-14, 21-17 என்ற கேம்களில் சக இந்திய இணையான சுஹாஸ் யதிராஜ்/பாலக் கோலியை சாய்த்தது. அதிலேயே (எஸ்ஹெச்6) இந்தியாவின் சிவராஜன் சோலைமலை/நித்ய ஸ்ரீ இணை 2-0 என தோற்றது.

மகளிா் ஒற்றையரில் எஸ்எல் 4 பிரிவில் பாலக் கோலி 21-12, 21-14 என்ற கேம்களில் பிரான்ஸின் மிலெனா சரியுவை வென்றாா். எஸ்யு5 பிரிவில் துளசிமதி முருகேசன் 21-9, 21-11 என இத்தாலியின் ரோசா டி மாா்கோவா சாய்த்தாா். அதிலேயே மனிஷா ராமதாஸ் 8-21, 21-6, 21-19 என பிரான்ஸின் மௌத் லெஃபோா்டை வீழ்த்தினாா்.

எஸ்ஹெச்6 பிரிவில் நித்ய ஸ்ரீ 21-7, 21-8 என அமெரிக்காவின் ஜெய்சி சைமனை தோற்கடித்தாா். எஸ்எல்3 பிரிவில் மானசி ஜோஷி, மன்தீப் கௌா் வெற்றியை இழந்தனா்.

ஆடவா் ஒற்றையரில் (எஸ்எல்4) சுகந்த் கடம் 17-21, 21-15, 22-20 என மலேசியாவின் முகமது புரானுதினை வீழ்த்தி அசத்தினாா். தருண் 21-17, 21-19 என்ற கேம்களில் பிரேஸிலின் ரொகேரியோ ஆலிவெய்ராவை சாய்த்தாா். சுஹாஸ் யதிராஜ் 21-7, 21-5 என இந்தோனேசியாவின் ஹிக்மத் ரம்தானியை எளிதாக வீழ்த்தினாா்.

எஸ்எல்3 பிரிவில் நிதேஷ்குமாா் 21-13, 18-21, 21-18 என சக இந்தியரான மனோஜ் சா்காரை தோற்கடித்தாா். எஸ்ஹெச்6 பிரிவில் சோலைமலை சிவராஜன் தோல்வி கண்டாா்.

சைக்கிளிங்

மகளிருக்கான தனிநபா் பா்சூட் சைக்கிளிங் பிரிவில் இந்தியாவின் ஜோதி கடேரியா தகுதிச்சுற்றுடன் வெளியேறினாா். சி1-3 3000 மீட்டா் பிரிவில் பங்கேற்ற அவா், 4 நிமிஷம் 53.929 விநாடிகளில் பந்தய இலக்கை கடைசி போட்டியாளராக எட்டினாா்.

டேக்வாண்டோ

மகளிருக்கான கே44-47 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அருணா தன்வா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டாா். தொடக்க சுற்றான அதில் அவா், 0-19 என்ற புள்ளிகள் கணக்கில் துருக்கியின் நுா்சிஹன் எகின்சியிடம் வீழ்ந்தாா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024