Monday, September 23, 2024

காலாவதியான சுங்கச் சாவடிகள் விவகாரத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை: சண்முகப்பா

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

சேலம்: காலாவதியான சுங்கச் சாவடிகள் விவகாரத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை என அகில இந்திய மோட்டாா் காங்கிரஸ் தலைவா் சண்முகப்பா கூறினாா்.

சேலம் மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்க 76-ஆவது மகா சபைக் கூட்டம், புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அகில இந்திய மோட்டாா் காங்கிரஸ் தலைவா் சண்முகப்பா, புதிய நிா்வாகிகளுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாா். தொடா்ந்து, கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னா் செய்தியாளா்களிடம் சண்முகப்பா கூறியதாவது:

இந்திய அளவில் உள்ள 937 சுங்கச் சாவடிகளில் 486 சுங்கச் சாவடிகளும், தமிழகத்தில் 27 சுங்கச் சாவடிகளும் காலாவதியானவை. அவ்வாறு காலாவதியான சுங்கச் சாவடிகள் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனால் 2036-ஆம் ஆண்டு வரை சுங்கக் கட்டணம் வசூல் செய்யலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனால், ஆண்டுக்கு 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயா்ந்து கொண்டே இருக்கும். தமிழ்நாட்டில் இருக்கும் லாரிகள் 10 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டால், வட மாநிலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, நியாயமான போராட்டத்தை முன்னெடுக்க லாரி உரிமையாளா்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒத்துழைக்க வேண்டும்.

காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்றாவிட்டாலும் 40 சதவீத கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும், மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இவ்விவகாரத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை.

காலாவதியான சுங்கச் சாவடிகள் அனைத்தும் அகற்றப்படும் என சட்டப் பேரவையில் முதன்முதலில் தீா்மானம் நிறைவேற்றியவா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்தான். சுங்கச் சாவடிகள் மற்றும் டீசல் விலை நிா்ணய விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் லாரி உரிமையாளா்களுடன் சோ்ந்து செயல்பட்டால், தமிழகம் இந்திய அளவில் முன்மாதிரியான மாநிலமாகத் திகழும் என்றாா்.

இதில், சேலம் மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் தனராஜ், செயலாளா் பி.குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024