கிழக்கு திமோர் சென்ற போப் ஆண்டவருக்கு உற்சாக வரவேற்பு

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

டிலி,

தென்கிழக்கு ஆசிய நாடான கிழக்கு திமோருக்கு சென்ற போப் ஆண்டவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வாடிகன் மற்றும் திமோர் கொடிகளை அசைத்து, மஞ்சள் மற்றும் வெள்ளை நிற குடைகளை அசைத்தபடி, போப் பிரான்சிசை அவர்கள் வரவேற்றனர்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ் பப்புவா நியூ கினியாவிலிருந்து கிழக்கு திமோரின் டிலி நகருக்கு சென்றார். ஜனாதிபதி ஜோஸ் ராமோஸ் மற்றும் பிரதம மந்திரி சனானா குஸ்மாவோ ஆகியோர் விமான நிலையத்தில் போப்பை வரவேற்றனர். வரவேற்பு விழாவிற்குப் பிறகு அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் போப் உரையாற்றினார்.

உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான கிழக்கு திமோர், 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. அதன்பிறகும் உள்நாட்டு பிரச்சினை காரணமாக பெரும் பாதிப்புகளை சந்தித்து வந்தது. இந்தோனேசியாவுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் 2 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இதற்கு முன்பு 1989-ம் ஆண்டு போப் ஆண்டவர் ஜான் பால் திமோருக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

1975 -ல் திமோர் மீதான தனது காலனியாதிக்கத்தை போர்ச்சுக்கல் கைவிட்டது. இதைத்தொடர்ந்து இந்தோனேசியா படையெடுத்து திமோரை கைப்பற்றியது. அப்போது கிழக்கு திமோர் மக்களில் சுமார் 20 சதவீதம் பேர் மட்டுமே கத்தோலிக்கர்கள். இன்று, கிழக்கு திமோரின் 13 லட்சம் மக்களில் சுமார் 98 சதவீதம் பேர் கத்தோலிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024