Monday, September 23, 2024

இந்தியை திணிப்பது யார்..? பிரதமர் மோடியா.. காங்கிரஸ் கட்சியா..? – அண்ணாமலை கருத்து

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

புதிய தேசிய கல்விக் கொள்கை தாய் மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தனது 'எக்ஸ்' சமூகவலைதள பக்கத்தில் பதிவில் கூறியிருப்பதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இந்தி திணிப்பு தொடர்பாக நடைமுறையில் இல்லாத விஷயங்களை கூறுகிறார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உருவாக்கிய முதல் தேசிய கல்விக் கொள்கையில், அனைத்து இந்தியர்களுக்கும் இந்தி கட்டாயம் என கூறப்பட்டது. 2-வதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உருவாக்கி தேசியக் கல்விக் கொள்கையில் இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான மொழியாக இந்தியை உருவாக்கும் வகையில், அதை கற்கவும், பயன்படுத்தவும் ஊக்க அளிக்கப்பட்டது.

ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ல், தாய் மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. நாட்டின் அனைத்து மக்கள் மீதும் இந்தியை திணித்தது யார்? பிரதமர் மோடியா அல்லது காங்கிரஸ் கட்சியா?

பிரதமர் மோடி தாய் மொழிக்கு என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பலாம். என்னுடைய தாய் மொழி தமிழ் மொழிக்கு பிரதமர் மோடி பல்வேறு பெருமைகளை சேர்த்துள்ளார். ஐ.நா. சபையில் முதல் முறையாக தமிழ் மொழியில் பேசிய பிரதமர் என்ற பெயரை பெற்றவர் மோடி. 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என ஐ.நா சபையில் உரையாற்றினார். மேலும், பாரதியாரின் நினைவாக அவரது பிறந்த நாள், டிசம்பர் 11-ந்தேதியை தேசிய மொழிகள் தினமாக அறிவித்தார்.

காசி தமிழ் சங்கம் மற்றும் சவுராஷ்டிர தமிழ் சங்கம் ஆகிய இரண்டு கலாச்சாரங்களின் சங்கமத்தை உருவாக்கினார். திருக்குறளை குறைந்தது 100 மொழிகளில் வெளியிட வேண்டும் என்ற லட்சியத்தின் ஒரு பகுதியாக 13 மொழிகளில் திருக்குறளை வெளியிட்டார். செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவினார். முன்பு எப்போதும் இல்லாத வகையில், தமிழின் பெருமையை உலகம் முழுவதும் பிரதமர் மோடி எடுத்து சென்றுள்ளார்.

தமிழ் மொழியின் செம்மொழி அந்தஸ்தை மேம்படுத்துவதற்காக, ரூ.24 கோடி செலவில் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் (CICT) புதிய வளாகத்தை நமது பிரதமர் திறந்து வைத்தார். வட இலங்கையில் தமிழ் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைப் பாதுகாக்க, நமது பிரதமர் அவர்கள் ரூ.120 கோடியில் யாழ்ப்பாணக் கலாச்சார மையத்தை நிர்மாணிக்க அனுமதித்தார்.

நமது பிரதமர் 2023ம் ஆண்டு ஜூலை மாதம் தனது சுற்றுப்பயணத்தின்போது பிரான்சின் செர்ஜி நகரில் புனித திருவள்ளுவருக்கு ஒரு சிலையை அறிவித்தார், அது டிசம்பர் 2023 இல் நிறுவப்பட்டது. சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும் என்ற சமீபத்திய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி பிராந்திய மொழிகளை வளர்க்க மேற்கொண்ட நடவடிக்கைகளில் 10 சதவீதம் கூட காங்கிரஸ் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024