Friday, September 20, 2024

பாராஒலிம்பிக்: பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

பாராஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பாரீசில் நேற்று முன்தினம் இரவு கோலாகலமான கண்கவர் கலை நிகழ்ச்சி, வியப்பூட்டும் சாகசங்களுடன் நிறைவடைந்தது. இதில் 170 நாடுகளைச் சேர்ந்த 4,400க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் 22 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.

இதில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 18வது இடத்தை பிடித்தது. பதக்கம் வென்ற இந்திய அணியினர் இன்று தாயகம் திரும்பினர். டெல்லி விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாராலிம்பிக் வரலாற்றிலேயே இந்தியா அதிக அளவு பதக்கங்களை வென்று சாதனை படைத்து இருந்தது. கடந்த டோக்கியோ பாராலிம்பிக் தொடரில் இந்தியா 19 பதக்கங்கள் வென்று இருந்தது. அதுவே வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச பதக்கமாக இருந்தது. அந்த எண்ணிக்கையை இந்த முறை முந்திய இந்திய வீரர்கள் மொத்தம் 29 பதக்கங்களை வென்று அசத்தினர்.

7 தங்கப்பதக்கம், 9 வெள்ளிப்பதக்கம் மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களை இந்திய பாராஒலிம்பிக் வீரர்கள் வென்றனர்.

இந்நிலையில் பாராஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

அதன்படி தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.75 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் வெண்கல பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.30 லட்சமும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அணிகள் பிரிவில் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.22.5 லட்சமும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு திரும்பிய வீரர்களுக்கு மத்திய அரசு சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு வீரர்களை பாராட்டினார்.

அதில் அவர் பேசியதாவது, "பாரா விளையாட்டில் நமது நாடு முன்னேற்றம் அடைந்து வருகின்றது. கடந்த பாராஒலிம்பிக்கில் 19 பதக்கங்களை வென்ற நாம் தற்போது 29 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளோம். அடுத்த பாராஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்" என்று கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024