பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.14 குறைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 68 அமெரிக்க டாலராக குறைந்திருக்கும் நிலையில், அதற்கு இணையாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை குறைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் கடைசியாக கடந்த மார்ச் 14-ம் தேதி பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. அப்போது உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 89.94 டாலராக இருந்தது. அப்போது இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ. 55.69 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.56.45 ஆகவும் இருந்தது. இப்போது கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 68 டாலராக குறைந்து விட்ட நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் அடக்கவிலை முறையே ரூ.42.09, ரூ.42.63 ஆக குறைந்திருக்கிறது.

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் போதெல்லாம் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போதும் அதன் பயன்களை மக்களுக்கு வழங்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோது, சில காலம் பெட்ரோல், டீசல் விலைகள் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை என்பது உண்மைதான். ஆனால், அதனால் ஏற்பட்ட இழப்பைவிட, அதிக லாபத்தை கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த காலத்தில் பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு விற்றதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டியுள்ளன.

உலக அளவில் தேவை குறைந்திருப்பதன் மூலம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.13.60, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.13.82 குறைக்கப்பட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடந்த பல ஆண்டுகளாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஒரளவாவது நிவாரணம் வழங்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024