Monday, September 23, 2024

கல்வித்தரத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது: மத்திய அமைச்சர் பாராட்டியுள்ளதாக தமிழக அரசு பெருமிதம்

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

கல்வித்தரத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது: மத்திய அமைச்சர் பாராட்டியுள்ளதாக தமிழக அரசு பெருமிதம்

சென்னை: கல்வித்தரத்தில் நாட்டிலேயே தமிழகம் சிறந்து விளங்குவதாக, மத்திய கல்வி அமைச்சர் பாராட்டியுள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு பள்ளிகளின் கல்வித்திறனை மேம்படுத்த ரூ.1,086 கோடியில் 614 பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.551.41 கோடியில் 28,794 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, ரூ.436.74 கோடியில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

முதல்வரின் காலை உணவுத்திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் தற்போது அரசுமற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.

காட்டுப் பகுதிகளிலும் மலைப்பகுதிகளிலும் பள்ளிகளுக்குச் சென்று வரும் குழந்தைகளின் சிரமங்களை போக்க, போக்குவரத்து பாதுகாவலர்களுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களில் மாற்றுத்திறன் மாணவர்களை அடையாளம் காண ‘நலம் நாடி’ என்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, 10 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். தமிழக முதல்வர் திறனாய்வுத் தேர்வு மூலம், 11-ம் வகுப்பு பயிலும் 1,000 மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.1000 வீதம் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படுகிறது.

கிராமப்புற மாணவ, மாணவியர் உரிய நேரத்தில் பள்ளி வந்து செல்ல வசதியாக, 3,44,144 பேருக்கு ரூ.165.84 கோடியில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் கீழ், 6 லட்சத்துக்கும் மேற்பட் மாணவ, மாணவியர் மாதம் ரூ.1,000 பெறுகின்றனர்.

டெல்லியில் கடந்த ஆக.13-ம்தேதி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்ட தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள செய்திகள் தமிழகத்தின் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளன.

அதாவது, தேசிய அளவில் தரவரிசைப்படுத்தப்பட்ட 926 கல்லூரிகளில் தமிழக கல்லூரிகள் மட்டும் 165. அதற்கு அடுத்த நிலைகளில் டெல்லியில் 88, மகாராஷ்டிரா – 80, கர்நாடகா – 78, உத்தரப்பிரதேசம் – 71, அசாம் – 15, மத்தியப்பிரதேசம், சண்டிகர், ஜார்க்கண்ட்,ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தலா 12 கல்லூரிகள் என தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், உயர்கல்வியில் தமிழகம் தலைசிறந்து விளங்குவது தெளிவாகிறது.

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், திறன்மிகு வகுப்பறைகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், காலை உணவு என பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதால், அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து, கல்வித்தரத்தில் நாட்டின் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024