ஓசூரில் ரூ.100 கோடி முதலீட்டில் மின்னணு, டெலிமேடிக்ஸ் நிறுவனம்: சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

ஓசூரில் ரூ.100 கோடி முதலீட்டில் மின்னணு, டெலிமேடிக்ஸ் நிறுவனம்: சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை: ஓசூரில் ரூ.100 கோடி முதலீட்டில் ஆர்ஜிபிஎஸ்ஐ நிறுவனத்தின் மின்னணு, டெலிமேடிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தை அமைக்க சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உற்பத்தி, உள்கட்டமைப்பு வளர்ச்சியில் தனியார் மற்றும் பொதுத்துறை முதலீட்டை அதிக அளவில் ஈர்த்து, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொழில் துறை வளர்ச்சியை அரசு ஏற்படுத்தி வருகிறது.

சீரான, பரவலான வளர்ச்சி என்ற கோட்பாட்டை கடைபிடிப்பதால் உயர்கல்வி சேர்க்கையில் நாட்டிலேயே அதிகபட்ச விகிதத்தை அடைந்தும், பன்முக திறன் கொண்ட சிறப்பான மனிதவளத்தை உருவாக்கியும், நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி தளமாகவும், அறிவுசார் பொருளாதாரமாகவும் தமிழகம் விளங்குகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழகஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவும், மாநில பொருளாதாரத்தை மேலும் வலுவடைய செய்யவும், 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அதை அடைய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த இலக்கை அடைய, உற்பத்தி, சேவை துறைகளில் பெருமளவு முதலீடுகளை ஈர்க்க வேண்டும். அதிக அளவில் வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய தொழில்நுட்பம், மூலதன துறைகளில் சமச்சீரான முதலீடுகளை ஈர்ப்பது மிகவும் அவசியம். இதை கருத்தில் கொண்டு, தமிழகத்துக்கு அதிக அளவு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றார். அங்கு சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் உலகின் 17 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,516கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், உலகஅளவிலான பல்வேறு முன்னணிநிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சிகாகோவில் கடந்த 12-ம் தேதி நடந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஆர்ஜிபிஎஸ்ஐ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ரூ.100 கோடி முதலீட்டில் ஓசூரில்மேம்பட்ட மின்னணு, டெலிமேடிக்ஸ் உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்காக இந்த நிறுவனத்துக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் ட்ராய் நகரை தலைமையிடமாக கொண்டது ஆர்ஜிபிஎஸ்ஐ (Rapid Global Business Solutions, Inc.) நிறுவனம். இது பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு பணியாளர் மேலாண்மை, பொறியியல், தரமான வாழ்க்கை சுழற்சி மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப தீர்வுகளையும், பல துறைகளுக்கான மேம்பட்ட மின்னணு, தொழில்நுட்ப தீர்வுகளையும் வழங்குகிறது.

ஒப்பந்த நிகழ்வில், ஆர்ஜிபிஎஸ்ஐ நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் நானுவா சிங், முதன்மை அலுவலர் ரவிக்குமார் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தக துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா, துறை செயலர் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024