அரசு பிஎட் கல்லூரிகளில் சேர செப்.16 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் தகவல்

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

அரசு பிஎட் கல்லூரிகளில் சேர செப்.16 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் தகவல்

சென்னை: “அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 16-ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்குவதாக,” உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

மாநில அளவிலான பாரதி இளம் கவிஞர் கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. மாணவர்கள் பிரிவில் முதலிடம் பெற்ற பழநி பழனியாண்டவர் கலை அறிவியல் பண்பாட்டுக்கல்லூரி மாணவர் முகமது அன்சாரிக்கும் மாணவிகள் பிரிவில் முதலிடத்தை பிடித்த சேலம் புனித சூசையப்பர் கலை அறிவியல் கல்லூரி மாணவி நிவேதாவுக்கும் அமைச்சர் பொன்முடி பரிசுத் தொகையாக தலா ரூ.1 லட்சமும், பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:“நடப்பு கல்வி ஆண்டின் பிஎட் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 16-ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 26-ம் தேதி முடிவடைகிறது. 30-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அக்டோபர் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் அக்டோபர் 23-ம் தேதி தொடங்கும். பிஎட் படிப்பில் அரசு கல்லூரிகளில் 900 இடங்கள், அரசு நிதியுதவி உதவிபெறும் கல்லூரிகளில் 1,040 இடங்கள் என மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன.

புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்பது ஏன்? – தமிழக கல்வித்துறைக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதி அதிகம் உள்ளது. அதை தொடர்ந்து கேட்டுக்கொண்டே தான் இருக்கிறோம். பள்ளி கல்வித்துறைக்கு பிஎம் ஸ்ரீ நிதியைக்கூட தரவில்லை. புதிய கல்விக் கொள்கையில் உள்ள பல திட்டங்களை நாங்கள் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி விட்டோம். ஆனால், சில திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட முடியாதவையாக உள்ளன.குறிப்பாக, 3, 5, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தச் சொல்லுகிறார்கள். அதை எப்படி ஏற்க முடியும்?

ஆரம்ப காலத்தில் இஎஸ்எல்சி இருந்தது அதனால்தான் பலர் 8-ம் வகுப்பை தாண்டவில்லை. அதை மாற்றி தான் எஸ்.எஸ்.எல்.சி முறை கொண்டுவரப்பட்டது. 10+2+3 தான் நமது கல்வி முறை. அவர்கள் சொல்வது போல் செய்தால் இடைநிற்றல் அதிகரிக்கும். அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பயில வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அந்த வாய்ப்பு இதுபோன்ற சூழல்களால் மறுக்கப்படுகிறது. தமிழகத்தில் அண்ணா காலத்தில் இருந்தே இருமொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது.

புதிய கல்விக் கொள்கையில் உள்ள மதிய உணவு திட்டங்கள் எல்லாம் காமராஜர் காலத்தில் இருந்து செயல்பட்டு வரும் திட்டங்கள். பி.ஏ., பி.எஸ்சி சேர்வதற்குக்கூட நுழைவுத்தேர்வு கொண்டு வர வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் சொல்கிறார்கள். பொறியியல் படிப்பில் சேர முன்பு நுழைவுத் தேர்வு இருந்தது அதை நீக்கியவர் கருணாநிதி தான். ஆங்கிலத்திலும், படிக்க வேண்டும் தமிழ் வழியிலும் படிக்க வேண்டும் என்று பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழியில் கல்வி கொண்டு வந்தார் கருணாநிதி.

இப்போது முதல்வர் ஸ்டாலின் எல்லா பாடங்களையும் தமிழ்வழியில் கற்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். மாணவர்களுக்கு பாடப்புத்தங்களும் தமிழ் வழியில் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் இருந்தால் போதும். ஆங்கிலம் சர்வதேச மொழி அது அனைவரும் படிக்க வேண்டியது கட்டாயம். மாணவர்கள் விருப்பப் பாடமாக எதை வேண்டுமானாலும் படிக்கட்டும். ஆனால், கட்டாயம் இதைத்தான் படித்தாக வேண்டும் என்று சொல்ல முடியாது,” என்று அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024