Sunday, September 22, 2024

தேசிய நெடுஞ்சாலையில் தமிழகம் நம்பர் 1 ஆக உள்ளது – நிதின் கட்காரி

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

தமிழக அரசு நிலம் கையகபடுத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.

தஞ்சை,

தேசிய நெடுஞ்சாலை பணிகளை ஆய்வு செய்ய ஹெலிகாப்டர் மூலம் மத்திய நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரி கும்பகோணம் வந்தடைந்தார். அங்கு அவர் தஞ்சாவூர் -கும்பகோணம் – விக்கிரவாண்டி இடையே அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணிகளை ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்காரி,

சர்வதேச அளவில் வாகன உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. அதில் இந்தியாவின் பங்கும் மிக முக்கியமானது.

விக்கிரவாண்டி – கும்பகோணம் -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணி ஏற்கனவே சுமார் 4 ஆண்டுகள் கால தாமதமாகிவிட்டது. இப்போது பணிகளைத் துரிதப்படுத்தி இருக்கிறோம். அடுத்த மூன்று மாதங்களில் இந்த சாலைப் பணிகள் முழுமையாக முடியும். இதற்கு மேல் இந்த சாலைப் பணிகள் நிச்சயம் தாமதமாகாது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்குச் சாகுபடி நிலங்கள் அதிகம் இருக்கிறது. இதனால் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. இங்கு நெடுஞ்சாலை பணிகள் தாமதமாக இதுவே முக்கிய காரணம். தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால் மேலும் பல சாலை திட்டங்கள் தமிழகத்தில் அமல்படுத்தப்படும். விரைவில் தஞ்சாவூர் -அரியலூர் – பெரம்பலூர் நகரங்களை இணைக்கும் புதிய சாலை திட்டத்தை அமைக்க உள்ளோம்.

இதன் மூலம் சிமெண்ட் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதிகள் எளிதாக வளர்ச்சி அடையும். மேலும், தஞ்சாவூரில் சுற்றுலாத் துறையில் வளர்ச்சி அதிகரிக்கும். தஞ்சாவூரில் புகழ்வாய்ந்த பிரகதீஸ்வரர் கோவில் உள்ள நிலையில், அங்குச் சுற்றுலாத் துறை வேகமாக வளர்ச்சி அடையும்.

இப்போது தமிழ்நாடு, ஆந்திரா , கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளோம். குறிப்பாக இங்குள்ள தொழில் நகரங்களை இணைப்பதே முக்கியம். விழுப்புரத்திலிருந்து பெங்களூர் வரை 180 கிலோமீட்டர் தொலைவிற்கு 5400 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழி சாலை அமைக்கப்படும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிரச் சிவகங்கை -தொண்டி – ராமேஸ்வரம் மற்றும் சென்னை -கல்பாக்கம் – மகாபலிபுரம் பகுதிகளை இணைக்கும் திட்டங்களும் உள்ளது.

கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் தேசிய நெடுஞ்சாலை பணிகள் என்று வந்துவிட்டால்.. உடனே தேவையான நிலங்களைக் கையகப்படுத்தித் தருகின்றன. இதனால் அங்குச் சாலைப் பணிகள் வேகமாக நடக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்துவதில் சிரமம் இருக்கிறது. இதனால் தான் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் நாட்டில் தமிழகம் நம்பர் 1 ஆக உள்ளது. தமிழக அரசு நிலம் கையகபடுத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அமெரிக்காவில் உள்ளதுபோல் சாலை கட்டுமானத்தின் தரத்தை கொண்டுவருவோம் என்றார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024