Saturday, September 21, 2024

சொல்லப் போனால்… டாப் விஐபிக்கள் சந்திப்பும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட சீசரின் மனைவியும்!

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

ஐயா, தர்மதுரை! பக்கத்து வயக்காட்டுக்காரர் ஒரு பக்கம் பொது வரப்பைக் கரைச்சுட்டு, இன்னொரு பக்கம் என்னோட காலி இடத்தையும் சேர்த்து உழுதுட்டாரு என்று கதறிக்கொண்டே நாட்டாமை வீட்டுக்குச் சென்று புகார் சொல்லப் போனால், அங்கே வீட்டுத் திண்ணையில நாட்டாமையும் பக்கத்து வயக்காட்டுக்காரரும் ஒன்னா உட்கார்ந்து டீ குடிச்சுக்கிட்டிருந்தா எப்படியிருக்கும்? இனிமேல நாட்டாம கிட்டேயிருந்து ஏதாவது நீதி கிடைக்குமா? அப்படியே கிடைச்சாகூட அது நீதியாத்தான் இருக்குமா? நம்பலாமா? இப்போ நம்மோட நாட்டாம நல்லவரா, கெட்டவரா? நமக்குப் பேசுவாரா, அவருக்குப் பேசுவாரா? இல்ல, நடுநிலையாவேதான் இருப்பாரா? குழப்பமா இருக்குல்ல, ஆமா, இருக்காதா பின்ன? நாம வேற அவரத்தானே நம்பியிருக்கோம்!

*

நாலு நாள்களுக்கு முன்னால உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வீட்டுல நடந்த கணபதி பூஜைக்கு நேரில் சென்று பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அவர் வீட்டு விநாயகருக்கு ஆரத்தியும் காட்டி வணங்கிவிட்டு வந்தார். இதெல்லாம் மரபே இல்லீங்க, இப்படி பெர்சனல் விசிட் அடிப்பதெல்லாம் நம் ஜனநாயகத்துக்கேகூட நல்லது கிடையாது என்று பலரும் விமர்சித்தனர்; இன்னமும் விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

தனிப்பட்ட முறையில் தன் வீட்டிற்கு வந்து சந்திக்க பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் அனுமதித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அதிகார அமைப்புகளிடமிருந்து மக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்க வேண்டிய பொறுப்பளிக்கப்பட்டுள்ள – அரசியலமைப்புச் சட்ட வரையறைகளுக்குள்பட்டு அரசு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டிய நீதித் துறைக்கு தவறான சமிக்ஞைகளை அளிப்பதாகவும் இந்தச் சந்திப்பு பற்றிக் குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபலோ, பிரதமர் மோடியைக் கணபதி பூஜைக்கு நீதிபதி சந்திரசூட் அழைத்திருப்பதில் தவறேதுமில்லை. ஆனால், இந்தச் ‘சந்திப்பை விளம்பரப்படுத்தும்’ பிரதமரின் முடிவுதான் தவறு; தேவையற்ற சந்தேகங்கள் ஏற்படக் காரணமாகிவிட்டது என்று குறிப்பிடுகிறார்.

இதற்கு நடுவிலேதான், மகாராஷ்டிர எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி சந்திரசூட் விலகியிருக்க வேண்டும் என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரிடம் போய், அதெல்லாம் பரவாயில்லா, பார்த்துக்கலாம், பயப்படாம இருங்கன்னு யாரால் கூற முடியும்?

உடனே, 15 ஆண்டுகளுக்கு முன்னால், 2009-ல் நடந்த இப்தார் விருந்தொன்றில் பிரதமர் மன்மோகன் சிங்கும் அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனும் சந்தித்துக்கொண்ட படத்தைத் தேடிப்பிடித்து வெளியிட்டுத் திருப்திப்பட்டுக்கொண்டனர் பாரதிய ஜனதா ஆதரவாளர்கள் (ஆனால், பிரதமரான மன்மோகன் சிங் அழைப்பின் பேரிலான விருந்து என்றாலும் அரசு ஏற்பாட்டில் ஒரே நேரத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி இது; அத்வானியும் சீதாராம் யெச்சூரியும்கூட பங்கேற்றனர். தனிப்பட்ட ஒன்றல்ல. இவ்விருந்தில் எந்தவித எக்ஸ்ளூசிவ்நெஸ்ஸும் இல்லை என்பது பற்றி யாரும் கவலைப்படவில்லை).

இதனிடையே, இந்த கணபதி பூஜைக்குப் பிரதமர் நரேந்திர மோடியைத் தம் இல்லத்துக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அழைக்கவேயில்லை என்பதாகச் சில நாள்களாக உச்ச நீதிமன்ற வளாகத்தில் ஒரே பேச்சாம். எது, எந்த அளவு உண்மை? என்று யாருக்குத் தெரியும்? ஒருவேளை முன்னால் ஒரு முறை திடீரென பாகிஸ்தானுக்குப் போய் இறங்கினாரே, அதுபோல இப்போது நீதிபதி சந்திரசூட் வீட்டுக்கும் பிரதமர் நரேந்திர மோடி போய்விட்டிருப்பாரோ?

நீதிபதி சந்திரசூட் இல்லத்துப் பிள்ளையாருக்கு (கொடுத்து வச்சவரு!) பிரதமர் மோடியே போய் பூஜை செய்தது ஒருபக்கம் இருந்துவிட்டுப் போகட்டும். நம்ம நாட்டாமையை நம்பி நாம இனி நம்ம வரப்பு புகாரைச் சொல்லலாமா? அல்லது வந்த வழியே திரும்பிவிடலாமா?

(மோடி – சந்திரசூட் இல்லச் சந்திப்புக்கு எவ்விதத் தொடர்புமில்லாத, ஆனால், நினைவுகூர வேண்டிய சில தகவல்கள் என்னவென்றால், இப்போதெல்லாம் நம் நாட்டில் நிறைய மதிப்புக்குரிய நீதிமான்கள் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதுமே பெரிதாகக் கால அவகாசம் எல்லாம்கூட எடுத்துக்கொள்ளாமல் நேராக வேறு ஏதாவது அரசு / அமைப்புகளின் பதவிகளை அலங்கரிக்கத் தொடங்கிவிடுகிறார்கள் – உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்துவிட்டுக் கேரள ஆளுநரான நீதிபதி சதாசிவம்போல. தவிர, ஏதோவொரு பெயரில் அரசியல் கட்சிகளுடைய அமைப்புகளின் கூட்டத்தில் எல்லாமும்கூட கலந்துகொள்கிறார்கள். சில பேர் ராஜிநாமா செய்துவிட்டு நேரே சென்று அரசியல் கட்சியிலேயே சேர்ந்தும்விடுகிறார்கள்).

கசந்த நகைச்சுவையும் கடுப்பான உடல் மொழியும்!

டாப் விஐபிக்கள் சந்திப்புச் செய்திகள் ஒருபக்கம் களை கட்டிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கோவையில் ஜி.எஸ்.டி. பற்றி நடத்தப்பட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன் அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசன் பேசிய பேச்சைக் கேட்டு எல்லாரும் சிரித்துக் கொண்டிருந்தனர். ஸ்வீட்டுக்கு ஒரு வரி, காரத்துக்கு ஒரு வரி, பன்னுக்கு ஒரு வரி, அதிலேயே கிரீம் வைச்சா ஒரு வரி. பில் போடுவதற்கு கம்ப்யூட்டரே திணறுதுங்க என்றபோது, கூட்டத்திலிருந்த மற்றவர்களுடன் மேடையிலிருந்த அமைச்சருமேகூட மிக லைட்டாக எடுத்துக்கொண்ட மாதிரிதான் சிரிக்கிறார்.

குறை கூறிய குரல்… சீனிவாசன்

சமூக ஊடகங்களில் சீனிவாசனின் பேச்சு வைரலாக, ஜிஎஸ்டியிலுள்ள மற்ற குளறுபடிகள் பற்றியெல்லாமும்கூட மீண்டும் ஒரு முறை சுடச்சுட பேசப்பட்டன.

இதனிடையே, என்ன நடந்தது என்று தெரியவில்லை. வியாழக்கிழமை இரவு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஊடகப் புள்ளியொருவர், கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் முன்னிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்புக் கேட்கும் விடியோவைப் பதிவேற்றினார். அவருடைய மன்னிப்பை (அழைத்துக் கேட்க வைத்தார்களா, அவரே வந்து கேட்டாரா, யாரும் சொல்லப் போவதில்லை!) பெரிய சாதனை எனக் கருதியோ என்னவோ பாஜகவினர் பதிவேற்ற, மறுநாள் காலையிலிருந்து சீனிவாசனின் ஜிஎஸ்டி பேச்சைவிட அதிவேகமாக இந்த மன்னிப்பு விடியோ பரவ, பார்த்தவர்கள் எல்லாரும் கொந்தளிக்க, ஹெவியாக பேக்ஃபயராகிவிட்டது.

Annapoorna
ஸாரி…

ஒவ்வொருவராகக் கண்டனம் தெரிவிக்கத் தொடங்க, திமுக எம்.பி. கனிமொழியோ பணியுமாம் என்றும் பெருமை என்ற திருக்குறளை மேற்கோள் காட்ட (திமுகவில் பெரும்பாலோர் என்ன காரணத்தாலோ இந்தப் பிரச்சினையில் ரொம்பவுமே அடக்கிவாசித்தனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை திரும்பியதும், வெட்கப்பட வேண்டிய விஷயம் என்றார்), கொஞ்சம் கொஞ்சமாக அகில இந்தியா முழுவதும் பரவ, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்காவெல்லாமும் கண்டிக்கத் தொடங்கிவிட்டனர். இதற்கு நடுவே வெள்ளிக்கிழமை மதியம் அந்தப் பதிவும் திடீரென அகற்றப்பட்டுவிட்டது. மற்றவையெல்லாமும் தெரிந்த விஷயங்கள்தான்.

ஆனால், இந்த எபிசோடில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு.

பெரும்பாலும் எல்லாரும் சீனிவாசன் மன்னிப்புக் கேட்டதை மட்டும்தான் பார்த்திருப்பார்கள். இந்த விடியோவில் இடம் பெற்ற மூவரின் உடல் மொழிதான் மிகவும் குறிப்பிடத் தக்கவை. இப்போது மீண்டும் ஒரு முறை அந்த விடியோவை ஒவ்வொரு காட்சியாக டிகோடிங் – decoding செய்து பாருங்கள், தெரியும் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எப்படி அமர்ந்திருக்கிறார், அவருடைய முக பாவம் எவ்வாறிருக்கிறது? வானதி சீனிவாசன் எவ்வாறு கவனிக்கிறார்? அன்னபூர்ணா சீனிவாசன் பேசுகிற விதமும் எழுந்து அமர்கிற முறையும் எவ்வாறு இருக்கின்றன? ஒருவேளை முழு விடியோவும் பார்க்கக் கிடைத்தால் எப்படியிருக்குமோ? இந்த விடியோ மூலம் யார், என்ன சாதித்தார்கள்?

இரண்டு: அன்னபூர்ணா சீனிவாசனின் மனநிலை. நடந்த இவற்றில் எதையும் அவர் நினைத்தே பார்த்திருக்க மாட்டார். பொதுவாக, பெருந் தொழில்களை நடத்துபவர்களுக்கே உரிய இயல்பின்படி, லைம்லைட்டுக்கு வராமல் எச்சரிக்கையாக ஒதுங்கிப் போய்விடக் கூடியவர் எனக் கூறப்படுபவராம் இவர். இத்தனைக்கும் கலந்துரையாடல் கூட்டத்தில் அரசுக்கு எதிராகவோ, அமைச்சருக்கு எதிராகவோ அவர் எதையுமே கூறிவிடவில்லை. அவர் பேசியதை, ஏற்கெனவே நொந்துபோயிருந்த, பலரும் ரசித்துப் பரப்பியதன் பலனை நெகடிவ்வாக அவர் அடைய நேரிட்டுவிட்டது. ஏன்டா, இந்தக் கூட்டத்துக்குப் போனோம்? என்றுதான் இப்போது நினைப்பார், பாவம்.

மன்னிப்பு விடியோவைப் பார்த்த யாராவது, அவர் எவ்வளவுதான் பெரிய அப்பா டக்கர் முதலாளியாக இருந்தாலும், இனிமேல் அமைச்சர் இருக்கிற கலந்துரையாடல் கூட்டங்களில் கருத்துத் தெரிவிக்கப் போவார்கள்? கருத்துத் தெரிவித்தாலும், எல்லாரும் ரசிக்கிறார்கள் என்பதற்காக, நகைச்சுவையாகப் பேசுவார்களா, என்ன? கப் சிப் கபர்தார்!

[அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்புக் கேட்கிற விடியோவைப் பார்க்கிறபோது, சம்பந்தா சம்பந்தம் இல்லாம, மோடியின் உக்ரைன் விசிட் பற்றி ரஷிய அதிபர் புதினிடம் நம்முடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்குவதாக சமூக ஊடகங்களில் பரவும் விடியோவொன்று நினைவுக்கு வருகிறது].

எவ்ளோ வேணா, கொரலு குடுங்கோ!

அதானி குழும முறைகேடுகள் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கும் செபி அமைப்பின் தலைவர் மாதவி புரி புச், வெளிநாடுகளில் செய்துள்ள முதலீடுகள் பற்றி செப். 14 ஆம் தேதி வெளிப்படுத்தியுள்ள காங்கிரஸ், தொடர்ந்து மேலும் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

இந்தியா – சீனா இடையில் பெரும் பதற்றம் நிலவிய காலகட்டத்தில் – செல்போன்களில் ரீல்ஸ்கள் எடுக்கப் பயன்படுத்திய சீனச் செயலிகளைக்கூடத் தடை செய்து, இந்திய மக்கள் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்ட காலகட்டத்தில் – சீன நிறுவனங்களில் மாதவி புரி புச் முதலீடுகள் செய்திருக்கிறாரே? இவையெல்லாம் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியுமா? என்று கேள்விகளை எழுப்பியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.

தொடர்ச்சியாக மாதவி பற்றிய முறைகேடுகளை ஹிண்டன்பர்க்கும் காங்கிரஸும் சொல்லி அடிக்கிறார்கள், ஆனால், பிரதமர் நரேந்திர மோடியோ, அல்லது அரசுத் தரப்போ, பாரதிய ஜனதா கட்சியோ இவற்றைப் பற்றியெல்லாம் கண்டுகொண்டதாகவே காட்டிக்கொள்வதில்லை. சீன முதலீடுகள் பற்றி மட்டுமென்ன ரமேஷுக்குப் பதில் சொல்லப் போகிறார்களா, என்ன?

பினிஷிங்கில தீராத இரண்டு டவுட்!

1. இந்தப் பள்ளிக்கூடங்களில் எல்லாம் பாவ புண்ணியச் சொற்பொழிவாற்றுவதற்கு அனுமதி கொடுத்தது யார்னு கண்டுபிடிச்சுட்டாங்களா?

2.பிறந்ததும் அவருக்கு வச்ச பேரே மகாவிஷ்ணுதானா?

சொல்லப் போனால்… ஆளைக் கொல்கிறார்கள், கட்டடத்தை இடிக்கிறார்கள்… சட்டம் யார் கையில்?

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024