10 ஆண்டுகளாக கொடூரம்… மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து வெளியாட்களை பலாத்காரம் செய்ய வைத்த கணவர்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டில் வசித்து வருபவர் கிஸ்செல் பெலிகோட் (வயது 72). இவருடைய கணவர் டாமினிக் பெலிகோட் (வயது 71). மஜான் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த இந்த தம்பதிக்கு ஒரு பெண் உள்பட 3 வாரிசுகள் உள்ளனர். 7 பேரக்குழந்தைகளும் உள்ளனர். இவர்களின் 50 ஆண்டு கால வாழ்க்கையில் கணவரை சூப்பர் நபர் என மனைவி கூறியுள்ளார்.

ஆனால், அது எல்லாம் பொய்யாகி போனது. கிஸ்செல்லை கணவர் டாமினிக் ஏறக்குறைய 10 ஆண்டுகளாக அவருக்கே தெரியாமல் சித்ரவதை செய்துள்ளார். ஆனால், இந்த விவரம் மனைவிக்கு தெரியவில்லை. ஏனெனில், வீட்டில் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து படுக்க வைத்து விடுவார்.

சுயநினைவு இல்லாத நிலையிலேயே, வெளியாட்களை அழைத்து வந்து மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்திருக்கிறார். இதனை புகைப்படங்களாக படம் பிடித்தும் வைத்து கொண்டார். இந்த விவரம் போலீசாருக்கு சமீபத்தில் தெரிய வந்தது. அவர்கள் அந்த புகைப்படங்களை கிஸ்செல்லிடம் காட்டியதும் அவர் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

துன்பத்தின் உச்சத்திற்கு சென்ற அவர், கணவர் டாமினிக்குக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் அடையாளம் வெளியே தெரிவதற்கு தொடர்புடைய நபர்கள் விரும்புவதில்லை. ஆனால், பாலியல் துன்புறுத்தல் மற்றும் போதை பொருட்களை பயன்படுத்தி துன்புறுத்துதல் போன்ற விசயங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் வெளிப்படையான விசாரணை வேண்டும் என கோரியுள்ளார்.

அவருடைய இந்த துணிச்சலை பாராட்டி நூற்றுக்கணக்கானோர் மார்சீல்லே நகரில் இருந்து பாரீஸ் நகர் வரை நேற்று பேரணியாக சென்று ஆதரவை வெளிப்படுத்தினர்.

ஒரு தம்பதியாக இவர்களுடைய 50 ஆண்டு கால வாழ்வில், பலமுறை இதுபோன்று பலரை வீட்டுக்கு கொண்டு வந்து கிஸ்செல்லின் கணவர் பலாத்காரம் செய்ய வைத்திருக்கிறார். இவற்றை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாகவும் எடுத்து வைத்துள்ளார்.

இதனை கணவர் ஒப்பு கொண்டிருக்கிறார். 2020-ம் ஆண்டில் சூப்பர்மார்க்கெட் ஒன்றில் 3 பெண்களின் உள்ளாடைகளுக்குள் உள்ளவற்றை ரகசிய கேமிரா கொண்டு டாமினிக் படம் பிடித்தபோது, போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதன்பின்னர், அவருடைய கணினியை போலீசார் ஆய்வு செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அதில், மனைவியை அவர் சித்ரவதை செய்த விவரம் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த விவரம் கிஸ்செல்லுக்கு தெரிய வந்தது. கடந்த ஆகஸ்டில், கணவரிடம் இருந்து கிஸ்செல் விவாகரத்து பெற்றார். இந்த வழக்கில் கணவர் உள்பட 51 பேர் கிஸ்செல்லை உடல்ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

அவருடைய 50 ஆண்டு கால நம்பிக்கை உடைந்து போனது என கிஸ்செல் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் வெளிப்படையாக விசாரணை நடைபெற வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

5 நீதிபதிகள் முன் நடந்த விசாரணையில் ஆஜரான கிஸ்செல், மர்ம தொலைபேசி அழைப்பு கூட வாழ்வை காப்பாற்றி இருக்கும். ஆனால், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஒருவர் கூட போலீசுக்கு செல்லவில்லை என வருத்தம் வெளியிட்டு உள்ளார்.

கணினியில் 200-க்கும் மேற்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அவற்றில் பல கணவர் டாமினிக்காலும் மற்றும் 90-க்கும் மேற்பட்ட சம்பவங்களில் வெளியாட்களும் இடம் பெற்று உள்ளனர் என விசாரணை அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர்.

2011 ஜூலை முதல் 2020 அக்டோபர் வரையிலான ஆண்டுகளில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில், குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க கூடும். டாமினிக் உள்ளிட்ட 18 பேர் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். மற்ற 32 பேர் வழக்கை எதிர்கொண்டு, கோர்ட்டுக்கு வந்து, சென்று கொண்டு இருக்கின்றனர். ஒருவர் சிக்காமல் தப்பியுள்ளார்.

டாமினிக் மற்றும் குற்றவாளிகளில் சிலர் நடந்த விவரங்களை ஒப்பு கொண்டுள்ளனர். எனினும், வேறு சிலர் கூறும்போது, டாமினிக்கின் மனைவி தூங்கி கொண்டிருக்கிறார் என நினைத்தோம் என்றும் ஒரு சிலர் இது ஒப்புதலுடனேயே நடைபெறுகிறது என நினைத்தோம் என விசாரணையில் கூறியுள்ளனர்.

இந்த வாரம் டாமினிக்கிடம் வாக்குமூலம் பெறுவது என முடிவானது. ஆனால், உடல்நல குறைவால் அது தள்ளிப்போனது. இந்நிலையில், நாளை (16-ந்தேதி) அவர் வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024