Saturday, September 21, 2024

பா.ம.க. சாதி கட்சி எனில் வி.சி.க. மட்டும் என்ன கட்சியாம்..?- அன்புமணி ராமதாஸ் கேள்வி

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

மது ஒழிப்புக்காக பேசும் திருமாவளவன் மது ஆலை உரிமையாளர்களுக்காக பரப்புரை செய்தது ஏன்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

மதுரை,

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மதுரை வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் போதைப் பொருளால் இளைஞர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள். காவல்துறை எதற்காக உள்ளது? முதல-அமைச்சருக்கு இதெல்லாம் தெரியுமா தெரியாதா? தமிழ்நாட்டில் அதிகமான வெளிநாட்டு பறவைகள் வரும் இடம் சென்னை தான். தமிழகத்திற்கு வரும் பறவைகளில் மூன்றில் ஒரு பங்கு சென்னைக்குதான் வருகின்றன. அந்த இடத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா தளம் கொண்டு வருவதினால் பறவைகள் பாதிக்கப்படும்" என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து "திருமாவளவன், பா.ம.க-வை சாதி கட்சி என்கிறாரே..?" என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் என்ன கட்சியாம்..?. பா.ம.க. சமூக நீதிக்காக தொடங்கப்பட்ட கட்சி. அருந்ததியர்கள், இஸ்லாமியர்கள் மிகவும் பிற்படுத்த பட்ட சமூகம் என 6 இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்த கட்சி பா.ம.க. சுற்றுச்சூழல், நீர் நிலைகள், கல்வி, மருத்துவம், மது ஒழிப்பு, நேர்மையான ஆட்சிக்காக போராடி வரக்கூடிய கட்சி பா.ம.க. இப்படி எல்லாம் எத்தனையோ பல சாதனைகள் செய்த கட்சியை திருமாவளவன் தொடர்ந்து இழிவு செய்து வருகிறார்.

அதனை அவர் தவிர்க்க வேண்டும். இத்தோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல வி.சி.க.வை பற்றி தரகுறைவாக எங்களாலும் பேச முடியும். நீங்கள் மாநாடு நடத்தினால் நடத்திக் கொள்ளுங்கள். மது ஒழிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். இந்தியாவில் எந்த கட்சி மது ஒழிப்பிற்கு எதிராக கூட்டம், மாநாடு நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம். எனவே அந்த அடிப்படையில் திருமாவளவன் எங்களை அழைத்தாலும், அடைக்காவிட்டாலும் நாங்கள் அந்த மாநாட்டை ஆதரிக்கிறோம். ஏனென்றால் இது எங்களின் கட்சியின் அடிப்படை கொள்கை. மது ஒழிப்பில் பா.ம.க. பி.எச்.டி. படித்துள்ளது. திருமாவளவன் தற்போது தான் எல்.கே.ஜி. வந்துள்ளார்.

திருமாவளவன் தற்போது தான் மது ஒழிப்பை தொடங்கி இருக்கிறார் ஆனால் எங்கள் நிறுவனர் ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்னதாக இருந்தே மது எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தவர். மது ஒழிப்பு போராட்டத்தில் பங்கேற்று பா.ம.க.வை சேர்ந்த 15 ஆயிரம் பெண்கள் சிறைக்கு சென்று இருக்கிறார்கள். பா.ம.க. தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்கள் காரணமாக தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 321 மதுக்கடைகளையும் இந்திய அளவில் 90 ஆயிரம் மதுக்கடைகளையும் மூடி உள்ளோம்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை குறைக்க பா.ம.க. தான் முயற்சி மேற்கொண்டது. திருமாவளவன் தன்னுடைய மது ஒழிப்பு மாநாட்டிற்கு கனிமொழியை அழைக்க வேண்டும். அவர்தான் மது ஒழிப்பிற்கு எதிராக பேசுகிறார். மதுவினால் ஏற்படும் சீரழிவுகள் பற்றி விளக்கி அவரை தமிழக முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள்.

தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் திருமாவளவனுக்கு இருந்திருந்தால் முதலில் அவர் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். ஒருபுறம் திருமாவளவன் மதுவை ஒழிக்க வேண்டும் என்கிறார். மறுபுறம் மது ஆலையின் உரிமையாளர்களுக்கு தேர்தலில் பிரசாரம் செய்கிறார். மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எதற்காக மது உற்பத்தி செய்யும் ஆலைகளின் உரிமையாளர்களான டி.ஆர். பாலு மற்றும் ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு சென்று வாக்கு கேட்டீர்கள்..?

இந்த இரண்டு தி.மு.க. எம்.பி.களும் தமிழக அரசு கடைகளுக்கு 40 சதவீதம் மதுவை சப்ளை செய்கிறார்கள். அமைச்சரவையில் பங்கு என்ற திருமாவளவனின் வீடியோ பதிவு மிகவும் சரியானது. அதே நேரத்தில் அந்த வீடியோவை நீக்கியது தான் தவறு. அனைத்து கட்சிகளும் தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் தங்களுடைய கொள்கைகளை அமல்படுத்த வேண்டும் என்று தான் கட்சி ஆரம்பிக்கிறார்கள். எனவே திருமாவளவனின் கருத்தில் தவறு இல்லை" என்று அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024