Saturday, October 19, 2024

தமிழக சட்டசபை கூட்டத்தொடரை 9 நாட்கள் மட்டுமே நடத்துவதா? அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு

by rajtamil
0 comment 29 views
A+A-
Reset

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டசபை கூட்டத்தை நடத்துவோம் என்று கூறியிருந்தது.

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டத்தொடரை 9 நாட்கள் நடத்துவதற்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு வேலுமணி அளித்த பேட்டி வருமாறு:-

அரசுத் துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக சட்டசபையை கூட்டுவது தொடர்பான அலுவல் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. 9 நாட்கள் சட்டசபை கூடுகிறது. இதில் 8 நாட்கள்தான் காலை, மாலை வேளைகளில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்கும். இந்த காலத்தில் 55 மானியக்கோரிக்கை மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடக்க இருக்கிறது.

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டசபை கூட்டத்தை நடத்துவோம் என்று கூறியிருந்தது. அதை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 45 நாட்கள் நடைபெற வேண்டிய மானியக்கோரிக்கை கூட்டத்தொடரை 8 நாட்களில் முடிப்பதற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் எதிர்ப்பை தெரிவித்தோம். இந்த கூட்டத்தொடரை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை காரணமாக காட்டி நாட்கள் குறைக்கப்பட்டதாக சபாநாயகர் கூறினார். இடைத்தேர்தலுக்கு பிறகு கூட்டத்தொடரை தொடர்ந்து நடத்தலாம் என்றோம். அதே கோரிக்கையை மற்ற கட்சியினரும் வலியுறுத்தினர். ஏற்கனவே நிறைய சட்டசபை உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே கூட்டத்தொடர் நாட்களை அதிகரிக்க கோரிக்கை வைத்தோம். ஆனால் இதற்கு சபாநாயகர் செவிசாய்க்கவில்லை.

மேலும் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியதைபோல, சட்டசபை கூட்ட நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிரப்பு செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்து வருகிறார். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை ஒளிபரப்பு செய்வதில்லை. இனிவரும் நாட்களிலாவது அவர்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

2004-ம் ஆண்டில் 6 நாட்கள்தான் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது என்று சபாநாயகர் கூறுகிறார். அப்போதிருந்த சூழ்நிலையில் அப்படி நடந்திருக்கலாம். ஆனால் இப்போது எதற்காக பழையதை பேசுகிறார்கள். அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024