Saturday, September 21, 2024

‘ஆட்சியில் பங்கு’ – திருமாவளவன் கொள்கைக்கு வானதி சீனிவாசன் ஆதரவு

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

‘ஆட்சியில் பங்கு’ – திருமாவளவன் கொள்கைக்கு வானதி சீனிவாசன் ஆதரவு

புதுச்சேரி: கூட்டணி ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என தைரியமாக திருமாவளவன் கூறியது வரவேற்கத்தக்கது. திருமாவளவன் கொள்கையை ஆதரிக்கிறோம். அவர் வெற்றி பெற வாழ்த்துகிறோம். இது நல்ல விஷயம் என பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் கொம்பாக்கம், ரெட்டியார்பாளையம், வில்லியனூர் உட்பட 7 பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வைத் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: புதுவையில் வாக்குச்சாவடி ஒவ்வொன்றிலும் 200 பேர் வரை புதிய உறுப்பினர் சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என தைரியமாக திருமாவளவன் கூறியது வரவேற்கத்தக்கது. திருமாவளவன் கொள்கையை ஆதரிக்கிறோம். அவர் வெற்றி பெற வாழ்த்துகிறோம். இது நல்ல விஷயம். பட்டியல் இனத்தவர்களுக்கு திமுக மாடல் அரசியல் அங்கீகாரம் இல்லை என்று திருமாவளவன் உணர்ந்திருக்கலாம்.

பட்டியலினத்தவருக்கு முக்கியத்துவத்தை பாஜக தருகிறது. சமூக நீதியை பின்பற்றுவது பாஜகதான். பாஜக பட்டியலினத்தவருக்கு தரும் முக்கியத்துவத்தை திருமாவளவன் புதுடெல்லியில் பார்த்து வருகிறார். அதனடிப்படையில் அவர் தற்போது ஆட்சி, அதிகாரம் குறித்து பேசுகிறார்.

தமிழகத்தில் பட்டியல் இனத்தவர்கள் அதிகளவில் வாழ்ந்து வருகிறார்கள். திராவிட மாடல் ஆட்சி, சமூக நீதி என பேசும் திமுக, பட்டியல் இனத்தவர்களுக்கு எவ்வித அங்கீகாரமும் தரவில்லை. தமிழகத்தில் திமுக அரசில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த எத்தனை பேர் முக்கிய இலாக்கா வைத்துள்ளனர். கடைசி இடத்தில் பட்டியல் இனத்தவரை அமரவைப்பதுதான் இவர்கள் சமூக நீதி.

பாஜகவில் தமிழகத்திலிருந்து ஒரு மத்திய அமைச்சர் இருக்கிறார். பட்டியல் இனத்தில் அருந்ததி சமூகத்தை் சேர்ந்தவர். அவர் தேர்தலில் தோற்றாலும் கூட அமைச்சர் ஆக்கி பிரதமர் மோடி அழகு பார்க்கிறார். இதுதான் பாஜக. இதுதான் சமூக நீதி.

பாஜக எப்போதும் மது ஒழிப்பிற்காக பாடுபட்டு வருகிறது. ஆகவே யார் மது ஒழிப்புக்கு பாடுபட்டாலும் பாஜக வரவேற்கும். மது ஒழிப்பு மாநாட்டுக்கு திருமாவளவன் அழைக்க மறுத்துவிட்டார். மது ஒழிப்புக்காக யார் பாடுபட்டாலும் இணைவோம். மாற்று வழியை முன்வைக்கிறோம். விவசாயிகளுக்கு பயன் தரும் கள் இறக்குவதையும் பேசுகிறோம்.

மது ஒழிப்பு மாநாட்டை பாஜக நடத்தினால் திருமாவளவன் வந்தால் சேர்த்துக் கொள்வோம். தமிழகம் மதுவால் பாதிக்கப்பட்டுள்ளது. கோவைக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வரி குறைகளை கேட்கவே வந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்வை திமுக, காங்கிரஸ் அரசியலாக்குவது சரியல்ல. காங்கிரஸ், திமுகவின் தவறுகளை ஆதாரப்பூர்வமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிப்படுத்தி வருகிறார். ஆகவே அவர் மீது திமுக, காங்கிரஸ் தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சியுடன் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தமிழக முதல்வர் அமெரிக்கா சென்று முதலீடுகளை ஈர்த்தது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024