Saturday, September 21, 2024

காத்மாண்டு: தலேஜு பவானி கோயிலில் வழிபட்ட 504 சிறுமிகள்!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்தவகையில் நேபாள நாட்டில் தலேஜு பவானி திருக்கோயிலில் பருவமடையாத சிறுமிகள் வழிபாட்டுத் தெய்வமாகப் போற்றும் முறை உள்ளது.

சிறுமிகளை தேவியின் அவதாரமாகக் கருதி போற்றி வழிபடும் கோயில் தான் தலேஜு பவானி திருக்கோயில். நேபாளத்தின் காத்மாண்டுவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். இந்தக் கோயிலில் வருடத்துக்கு ஒருமுறை இந்திர யாத்திரை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

இந்தாண்டு நடைபெற்ற இந்திர யாத்திரை திருவிழாவில் 12 வயதுக்குள்பட்ட 504 சிறுமிகள் சிவப்பு துணி அணிந்து அம்மன் போன்று வேடமிட்டு தலேஜு பாவானியை வழிபட்டனர்.

தலேஜு பவானி திருக்கோயிலில் குமாரி பூஜை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அங்குள்ள நேவாரி பெண்கள் பவானி கோயிலில் வருடத்திற்கு ஒருமுறை சடங்குகளும், பூஜைகளும் செய்து வழிபடுகின்றனர். அம்மன் குமாரி வடிவில் பூமிக்கு வந்ததாகக் கருதப்படுகிறது.

17-ஆம் நூற்றாண்டில் பிரதாப் மல்லா என்ற மன்னன் நேபாளத்தை ஆண்டு வந்தாராம். மதுபோதையில் இருந்த மன்னன் ஜெய பிரகாஷ் மல்லா, மனித வடிவில் வருகை தரும் தலேஜு தேவியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​அவள் மீது ஆசை கொண்டதாகவும், இது தேவியை புண்படுத்தியதால், எப்போதும் கோயிலில் ஒரு சிறுமியை தேர்வு செய்து தேவியாக வழிபடுமாறு சத்தியம் செய்யும்படி மன்னருக்கு ஆணையிட்டதாக புராணக் கதை கூறுகிறது. இந்த பாரம்பரியம் தான் இன்றுவரை தொடர்கிறது.

அதன்படி, நேவாரி உள்பட சாக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த 4 வயதுக்குள்பட்ட சிறுமிகள், தலேஜு பவானி அம்மனுக்கான தேர்வுக்கு செல்கிறார்கள், மிகவும் அச்சமடையச் செய்யும் சோதனைகளின்போது கூட, அந்தச் சிறுமி அமைதியாக அச்சமடையாமல், அனைத்து அம்சங்களும் கொண்டிருக்கிறாரோ அவரே தேர்வாளர்களால் தேர்வு செய்யப்படுகிறார். அந்தப் பெண்ணுக்கு அனைத்து லட்சணங்களும் பொருந்தி இருக்க வேண்டுமாம். தேர்வு செய்யப்பட்ட சிறுமி குமரியின் இல்லத்தில்தான் தங்கியிருக்க வேண்டும், அவரது பாதம் பூமியில் படாமல் பார்த்துக்கொள்வார்கள், குறிப்பிட்ட சில பூஜைகளின்போது மட்டுமே அந்த சிறுமி வீட்டுக்கு செல்ல முடியும். பூப்பெய்தும் வரை அச்சிறுமியே தலேஜு பவானியாக இருப்பார் என்கிறது இவர்களது நம்பிக்கை.

அந்த சிறுமியின் உடலில் தலேஜு பவானி அம்மன் இருப்பதாகக் கருதப்படுகிறது. அவளை அனைவரும் தெய்வமாக வணங்கித் துதிப்பார்களாம். அவளே மன்னர்களின் தெய்வமாகவும் இருக்கிறாள். அந்த பெண் பூப்பெய்தும்வரை தலேஜு பவானி அம்மனாகவே போற்றி வழிபடப்படுகிறாள்.

நேபாள நாட்டிலுள்ள சக்தி பீடங்களில் ஒன்றாக தலேஜு பவானி கோயில் கருதப்படுகிறது. வருடத்திற்கு ஒருமுறை மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் இந்தத் திருவிழாதான் கோயிலின் சிறப்பம்சமே. இக்கோயிலில் குறிப்பாக வளரிளம் பெண்கள் அதிகம் வழிபடுகின்றனர்.

வாழ்நாள் முழுவதும் சிறுமியாகவே இருக்க முடியாது என்பதால், நேபாளத்தை ஆளும் குமாரி தெய்வத்தை வாழ்நாளில் ஒருமுறையாவது அங்குள்ள மக்கள் வழிபட்டுவிடவேண்டும் என்று கருதுகிறார்கள்.

பெண்களின் உடல் ஆரோக்கியம், அவர்களின் வாழ்வு செழிப்பதற்கும் இங்குப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. வருடத்திற்கு ஒருமுறை செப்டம்பர் மாதத்தில் 'இந்திர ஜாத்திரா' எனும் விழா வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது. விழா நடைபெறும் எட்டு நாள்களும் பல்வேறு நகைகளை அணிந்துகொண்டு தேரில் அமர்ந்தபடி தேர்ந்தெடுக்கப்பட்ட வளரிளம் பெண் பவனி வந்து மக்களுக்குத் தரிசனம் தருவாராம். அந்தவகையில் இந்தாண்டு நடைபெற்ற இந்திர ஜாத்திரையில் 504 வளரிளம் பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

பெண்களை வழிபடும் ஊர்வலம் இந்து மதம், பௌத்தம் மற்றும் தாந்திரீகம் ஆகிய மூன்று முறைகளில் நடக்கிறது. ஊர்வலத்தில் பங்கேற்கும் சிறுமிகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படாது என்பது நம்பிக்கை.

நேபாளத்தில், மல்லா மன்னர் வம்சமானது, பிருத்வி நாராயண் ஷாவால் முறியடிக்கப்பட்டாலும் கூட, குமாரி தேவியை வணங்கும் பாரம்பரியம் மட்டும் தொடரப்பட்டு வருகிறது. 2008 ஆம் ஆண்டு வரை, மன்னர், தனது நெற்றியில் தலேஜு பவானியின் கரங்களால் நெற்றித் திலகத்தைப் பெற குமரி கோயிலுக்கு வருவார் என்றும், இதுவே, மன்னருக்கான அதிகாரத்தைப் பெறும் வழி என்று கருத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024