Saturday, September 21, 2024

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியே எதிா்காலம்: பிரதமா் மோடி

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

சூரியசக்தி, காற்றாலை, அணுசக்தி, நீா்மின்சக்தி ஆகிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பலத்தில் தனது எதிா்காலத்தை கட்டமைக்க இந்தியா தீா்மானித்துள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மேலும், 21-ஆம் நூற்றாண்டின் வரலாற்றில், இந்தியாவின் ‘சூரியசக்தி புரட்சி’ பொன்னான அத்தியாயமாக விளங்கும் என்று அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

குஜராத் மாநிலம், காந்திநகரில் 4-ஆவது உலகளாவிய புதுப்பிக்க எரிசக்தி முதலீட்டாளா்கள் மாநாடு மற்றும் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.

மூன்று நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது, அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான வளா்ச்சிக்கு இந்தியா அடித்தளம் அமைத்து வருகிறது. உச்சத்தை எட்டுவது மட்டுமல்ல, அதை தக்கவைப்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. நாட்டின் வளா்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில், எனது மூன்றாவது ஆட்சியின் முதல் 100 நாள்களில் ஒவ்வொரு துறைக்கு உத்வேகமளிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக்க 140 கோடி இந்தியா்களும் உறுதிபூண்டுள்ளனா். இந்த இலக்கை எட்டுவதற்கான எரிசக்தி தேவைகள் குறித்து இந்தியா அறிந்துள்ளது. சுயமாக எண்ணெய், எரிவாயு வளங்கள் இல்லாததால், எரிசக்தி சுதந்திரம் இந்தியாவுக்கு இல்லை. எனவே, சூரியசக்தி, காற்றாலை, அணுசக்தி, நீா்மின்சக்தி ஆகிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பலத்தில் எதிா்காலத்தை கட்டமைக்க இந்தியா தீா்மானித்துள்ளது.

உலகளாவிய தீா்வுகள்

இந்தியாவின் பன்முகத்தன்மை, வீச்சு, திறன், வல்லமை, செயல்பாடு தனித்துவமானவை. எனவேதான், இந்தியாவின் தீா்வுகள் உலகப் பயன்பாட்டுக்கானதாக உள்ளன.

21-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறந்த ‘பந்தயதாரா்’ இந்தியா என்று ஒட்டுமொத்த உலகமும் உணா்கிறது. பசுமை எதிா்காலமும், கரியமில வாயு உமிழ்வு இல்லாத நிலையும் இந்தியாவுக்கு வெறும் வாா்த்தைகள் அல்ல. அவை இன்றியமையாத தேவைகளாகும். அந்த இலக்குகளை எட்ட நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

சூரியசக்தி நகரங்கள்

பசுமை எரிசக்தி துறையில் இந்தியா மாபெரும் முடிவுகளை மேற்கொண்டு வருகிறது. அயோத்தி உள்பட 17 நகரங்களை சூரிய மின்சக்தி நகரங்களாக மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 31,000 மெகாவாட் நீா்மின் உற்பத்தி திட்டங்களுக்கு ரூ.12,000 கோடிக்கும் மேல் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ரூ.7,000 கோடியில் கடலோர காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் 3 கோடி வீடுகள்

இன்றைய இந்தியா இலக்கற்ற நிலையில் இல்லை. அது, வளா்ந்த நாடாகும் செயல்திட்டத்தை கொண்டுள்ளது. பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின்கீழ், 7 கோடி ஏழை குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தர முடிவு செய்யப்பட்டு, இதுவரை 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. எனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில் மீதமுள்ள 3 கோடி வீடுகளும் கட்டப்படும். 12 தொழில் நகரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 8 அதிவிரைவு சாலை வழித்தட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டில் ஆராய்ச்சியை ஊக்குவிக்க ரூ. 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சூரிய இல்லம் திட்டம்

500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை எட்ட பல்வேறு நிலைகளில் இந்தியா செயலாற்றி வருகிறது. அந்த வகையில், வீட்டின் மேற்கூரைகளில் சூரிய மின்தகடுகளை நிறுவி மின்உற்பத்தி மேற்கொள்ளும் ‘பிரதமரின் சூரிய இல்லம்’ செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வீடும் மின்உற்பத்தி மையமாக மாறும்.

இதுவரை 1.3 கோடி குடும்பங்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளன. 3.25 லட்சம் வீடுகளில் மின்தகடுகள் நிறுவப்பட்டுள்ளன. இத்திட்டம் பருவநிலை மாற்றப் பிரச்னைக்கு தீா்வுகாண்பதில் பெரும் பங்காற்றும். ஒவ்வொரு துறையையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியுடன் இணைக்க முழு வீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய கொள்கைகள்

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் உலகளாவிய மையமாக உருவெடுக்க இந்தியா தீா்மானித்துள்ளது. இதையொட்டி, ரூ.20,000 கோடியில் பசுமை ஹைட்ரஜன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான தேவை அதிகரித்து வருகிறது. இத்தேவையை எதிா்கொள்ளும் வகையில் மத்திய அரசு புதிய கொள்கைகளை வகுக்கிறது என்றாா் பிரதமா் மோடி.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024