Friday, September 20, 2024

ஜம்மு காஷ்மீர்: முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு; 58.85 சதவீத வாக்குகள் பதிவு

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

ஜம்மு,

காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி – பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால், 2018ம் ஆண்டு கூட்டணியில் இருந்து பாஜக விலகியதையடுத்து ஜம்மு-காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது. பின்னர், 2019ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

ஜம்மு-காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. இதனிடையே ஜம்மு-காஷ்மீரில் 2024 செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் 3 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட தேர்தலில் 24 தொகுதிகளுக்கும் 2ம் கட்ட தேர்தலில் 26 தொகுதிகளுக்கும், 3ம் கட்ட தேர்தலில் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் 24 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். பின்னர், முதற் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. முதற்கட்ட தேர்தல் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடந்து முடிந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரவு 7.30 மணி நிலவரப்படி 58.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக கிஷ்த்வாரில் 77.23 சதவீதமும் குறைந்தபட்சமாக புல்வாமாவில் 46.03 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெற துணை ராணுவப் படையினர், ஜம்மு-காஷ்மீர் ஆயுதப் படையினர், காவல்துறையினர் ஆகியோர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதியும் 3-வது கட்டமாக அக்டோபர் 1-ம் தேதியும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அடுத்த மாதம் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஜம்மு – காஷ்மீர் சட்டசபைத் தேர்தலில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.

Jammu & Kashmir Assembly Polls 2024 |As of 7:30 PM, in phase-I elections, the voter turnout stands at 58.85% with Kishtwar witnessing the highest voting percentage – 77.23% and Pulwama the lowest – 46.03% (approximate): Election Commission of India https://t.co/sHJowiHxWCpic.twitter.com/2PU471ZL4Q

— ANI (@ANI) September 18, 2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024