Friday, September 20, 2024

கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

திருவனந்தபுரம்,

குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய் ஆகும். இந்த நோய் மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது. 2022 ம் ஆண்டு முதன் முதலாக ஆப்ரிக்க நாடுகளில் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், ஆப்ரிக்க நாடுகளில், 'எம் – பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து, உலகளவில் அந்த தொற்றை பொது சுகாதார அவசரநிலையாக, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது. காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. சர்வதேச பயணியர் உள்பட வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

இந்தநிலையில், அரியானாவின் ஹிசார் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞருக்கு, கடந்த வாரம் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர், டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் மலப்புரம் திரும்பிய 38 வயதான நபருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில், அந்த நபர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மலப்புரம் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். மேலும் அவர், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குரங்கம்மை அறிகுறி தென்பட்டால், சுகாதார அமைப்பினருக்கு தகவல் தெரிவித்து சிகிச்சை பெறும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

மலப்புரத்தில், 'நிபா' வைரஸ் தொற்றால் 24 வயது இளைஞர் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது, குரங்கம்மை தொற்று அறிகுறிகளுடன், மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளது, அம்மாவட்ட மக்களை பீதியடையச் செய்துள்ளது. இதையடுத்து முககவசம் அணிவது உட்பட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024