Friday, September 20, 2024

சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களில் முன்கூட்டியே மீட்பு சாதனங்களை நிறுத்த அரசு நடவடிக்கை

by rajtamil
Published: Updated: 0 comment 1 views
A+A-
Reset

சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களில் முன்கூட்டியே மீட்பு சாதனங்களை நிறுத்த அரசு நடவடிக்கை

பசென்னை: “சென்னையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து முன்கூட்டியே படகுகள், மற்றும் மீட்பு சாதனங்கள் கொண்டு போய் நிறுத்தப்படும்,” என தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் அமுதா தெரிவித்துள்ளார்.

பேரிடர் காலங்களில் மத்திய, மாநில பேரிடர் முகமைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மற்றும் பயிற்சி சென்னையில் இன்று (செப்.18) தொடங்கியது. தக்ஷிண பாரத் ராணுவ தலைமை அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றை சேர்ந்த 35 முகமைகளின் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில், தென்பிராந்திய ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜென்ரல் தீரஜ் சேத், தென்மாநில ராணுவ தளபதி கரன்பீர் சிங், தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் உறுப்பினர் லெப்டினென்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன், தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் அமுதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர், ஐஏஎஸ் அதிகாரி அமுதா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டத்தில் அதிகாரிகள் அல்லது தொலைபேசி எண்கள் மாறியிருந்தால் அது குறித்த விவரங்களை புதிதாக சேர்க்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து கடந்த சனிக்கிழமை தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சென்னை நகரில் வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், சென்னை நகருக்கு அதிக கவனம் செலுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டம் தாழ்வான பகுதியாக உள்ளதோடு, கடலோர மாவட்டமாகவும் உள்ளது. இதனால், கடந்த மழையின் போது கிடைத்த அனுபவத்தைக் கொண்டு வரும் மழைக் காலத்தில் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சென்னையில் கடந்த மழையின் போது பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் படகுகள் உள்ளிட்ட மீட்பு சாதனங்கள் கொண்டு செல்லப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து முன்கூட்டியே படகுகள் மற்றும் மீட்பு சாதனங்கள் கொண்டு போய் நிறுத்தப்படும். அக்-15-ம் தேதிக்குப் பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்பதால், அக்டோபர் 2-வது வாரத்துக்குள் மீட்பு சாதனங்கள் கொண்டு போய் நிறுத்தப்படும்.

மழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தரும் தரவுகளின் அடிப்படையில் பொதுமக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படும். ‘டிஎன் அலர்ட்’ என்ற செயலி மூலம் பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் எந்த இடத்தில் மழை நீர் தேங்கும், உடனடியாக அருகில் உள்ள நிவாரண மையத்துக்கு செல்ல வேண்டும் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அதில் தெரிவிக்கப்படும். இவை தவிர, செல்போன் மூலமாகவும் எஸ்எம்எஸ் தகவல் அனுப்பப்படும். அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024