மருத்துவக் கல்வி இயக்குநருக்கு ரூ.5 லட்சம் அபராதம்: மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

மருத்துவக் கல்வி இயக்குநருக்கு ரூ.5 லட்சம் அபராதம்: மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: மருத்துவக் கல்வி இயக்குநருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தைச் சேர்ந்த அருணகிரிஉயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 2017-ல் தாக்கல் செய்த மனுவில், ‘என் மகள் 2017- 18 கல்வி ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இருப்பினும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முறைப்படி நடைபெறவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட என் மகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி சரவணன் இன்று (செப்.17) பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் மகள் (காட்டுநாயக்கன்) பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1124 மதிப்பெண்களை பெற்ற அவர், நீட் தேர்வில் 136 மதிப்பெண்களை பெற்று கவுன்சலிங்கில் கலந்து கொண்டுள்ளார். அவர் 46 இடங்களுக்கான பட்டியலில் 43-வது நபராக கலந்து கொண்டு இருந்திருக்கிறார். அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3 இடங்கள் இருந்த நிலையில், மருத்துவ கல்வி இயக்குநர் அவற்றை ஓசி பிரிவை சேர்ந்த சுபிஷா, ஸ்ரீமதி, கவிதா ஆகியோருக்கு ஒதுக்கியுள்ளார்.

மனுதாரரின் மகளுக்கு அரசு கல்லூரி எனக் குறிப்பிட்டு சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியில் இடம் வழங்கப்பட்டு, அவரிடம் கற்பித்தல் தொகையாக ரூ.9,600 பெறப்பட்டுள்ளது. மனுதாரர் கல்லூரியில் சேர்ந்த பின்பு அது சுயநிதி கல்லூரி எனக் குறிப்பிட்டு, ரூ.3.70 லட்சமும், கல்வி கட்டணமாக ரூ.75 ஆயிரம் கட்ட வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கட்டணம் முழுவதையும் மனுதாரர் செலுத்தியுள்ளார்

பின்னர் தொடர்ச்சியாக கட்டணம் செலுத்த இயலாது என்பதால், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தனக்கு இடம் ஒதுக்குமாறு மனுதாரர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துள்ளார் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளரிடமும் இது தொடர்பான கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வில, பழங்குடி இனத்தை சேர்ந்தவருக்கான இடம் ஓசி பிரிவை சேர்ந்த ஜீவானந்தம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.நல்ல மதிப்பெண்களுடன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு அரசு கல்லூரியில் இடம் வழங்காமல், செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்க கல்வியை இடை நிறுத்தம் செய்வதாக கடிதம் கேட்டு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

கலந்தாய்வில் மனுதாரருக்கு ஒதுக்கப்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி அரசு கல்லூரிகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டது சட்டவிரோதமானது. மாணவர்களையும் அவரது பெற்றோரையும் தவறான முறையில் வழிநடத்திய இந்த செயல் சட்ட விரோதமானது.மனுதாரரிடம் முன்பே சுயநதி கல்லூரி என குறிப்பிட்டிருந்தால் அவர் வேறு ஒரு சிறந்த கல்லூரியையாவது தேர்வு செய்திருப்பார். அந்த உரிமை அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மனுதாரரின் மகளது எதிர்காலம், அவரது மருத்துவ கனவு சிதைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு 2017-ல் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் இயக்குநர் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. மனுதாரர் மற்றும் மனுதாரரின் மகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக மருத்துவக் கல்வி இயக்குநருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.இதனை உத்தரவு நகல் கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் மனுதாரருக்கு அவர் வழங்க வேண்டும். மனுதாரர் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிய இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம், என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024