தென்காசியில் விவசாய நிலங்களுக்குள் படையெடுக்கும் யானைகள்: நிரந்தர தீர்வுக்கு வழி என்ன?

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

தென்காசியில் விவசாய நிலங்களுக்குள் படையெடுக்கும் யானைகள்: நிரந்தர தீர்வுக்கு வழி என்ன?

தென்காசி: விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டது தென்காசி மாவட்டம். கடையம், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, வாசுதேவநல்லூர் வட்டாரங்களில் பெரும்பாலான விவசாய நிலங்கள் இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளன. மாவட்டத்தில் பரவலான பகுதிகளில் காட்டுப் பன்றிகள் தொல்லை அதிகமாக இருக்கும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் யானைகள், கரடிகள், சிறுத்தைகள் தொந்தரவுகள் கூடுதலாக உள்ளன. அதிலும் வடகரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் தொல்லை நீண்ட காலமாக நீடிக்கிறது. யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களில் புகுந்து நெல், வாழை, தென்னை, மா போன்றவற்றை மட்டுமின்றி விவசாய நிலங்களில் உள்ள தண்ணீர் குழாய்கள், வேலிகளையும் உடைத்து சேதப் படுத்துகின்றன.

வனத் துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினாலும் மீண்டும் அவை விவசாய நிலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதனால் விவசாயத்தையே நம்பியுள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டக் கால கோரிக்கையாக உள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, "யானைகள் வருகையை தடுக்க மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி கூடுதலாக 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சோலார் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகழியை தூர்வாரி ஆழப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல், வாழை, தென்னை, மா போன்றவற்றை யானைகள் விரும்பி உண்ணும். எனவே, இவற்றைத் தேடி யானைகள் வருகின்றன. ருசியான தீவனம் கிடைப்பதால் மீண்டும் மீண்டும் யானைகள் வருகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சவுக்கு, தேக்கு, எலுமிச்சை, நார்த்தை, மிளகாய் போன்ற யானைகள் தின்னாத பயிர்களை சாகுபடி செய்தால் காலப் போக்கில் யானைகள் வருவது நின்றுவிடும். ஆனால் விவசாயிகள், தற்போதுள்ள மரப் பயிர்களை அழித்துவிட்டு புதிதாக மரங்களை சாகுபடி செய்வது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று கருதுகின்றனர். வேலிகளில் அதிக அளவில் தேன் கூடுகள் அமைத்தும் யானைகளை தடுக்கலாம்" என்று வனத் துறை அதிகாரிகள் கூறினார்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, "கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுதோறும் மாங்காய் சீசனுக்கு மட்டும் வனத்தையொட்டி உள்ள தோட்டங்களை யானைகள் சேதப்படுத்தின. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக வடகரை சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் தொடர்ந்து புகுந்து வருகின்றன. 10க்கும் மேற்பட்ட யானைகள் சிறு, சிறு குழுக்களாக ஒவ்வொரு இடங்களிலும் சுற்றித் திரிகின்றன. இரவில் வனத்தில் இருந்து வெளியில் வந்து விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தும் யானைகள், அதிகாலையில் வனப் பகுதிக்கு சென்ற நிலையில் தற்போது நிரந்தரமாகவே வனத்துக்குள் செல்லாமல் விவசாய நிலங்களிலில் சுற்றித் திரிகின்றன.

சமீப காலமாக ஊர் பகுதிகளுக்கும் யானைகள் வரத் தொடங்கிவிட்டன. நீண்ட காலமாக வளர்த்து வரும் மா, தென்னை போன்ற மரப் பயிர்களை அழித்துவிட்டு மாற்று பயிர்கள் சாகுபடி செய்வது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. தேன் கூடுகள், சோலார் வேலிகளையும் யானைகள் உடைத்து சேதப்படுத்து கின்றன. மேக்கரை பகுதியில் வனத்தையொட்டி சொகுசு விடுதிகள் ஆங்காங்கே உள்ளன. இவற்றில் இரவு நேரத்தில் கேளிக்கை நடப்பதால் வனப் பகுதிக்குள் யானைகள் செல்ல அச்சப்படுகின்றனவா என ஆய்வு செய்ய வேண்டும்.

வனத்தில் யானைகளுக்கு உள்ள தொந்தரவுகளை போக்கிவிட்டு, பெரிய குழுவாக இணைந்து அனைத்து யானைகளையும் வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும். வனப் பகுதியிலேயே யானைகளுக்கான இரை, தண்ணீர் கிடைக்கச் செய்ய வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி வன விலங்குகள் வெளியேறும் பகுதிகளில் முழுமையான அளவில் அகழிகள், சோலார் வேலிகள் அமைக்க வேண்டும்” என்று விவசாயிகள் கூறினார்.

யானைகள் தொல்லையால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று வழிவகைகளை ஆராய வேண்டும். வனத்துறை, வருவாய்த் துறை, வேளாண்துறை, விவசாய பிரதிநிதிகள் இணைந்து கலந்தாய்வு, கள ஆய்வு செய்து இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024