திருப்பதி லட்டில் விலங்கின் கொழுப்பு: சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்யத் தயாரா?

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்ததாகக் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார்.

விலங்குகளின் கொழுப்பு

திருமலை வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தில், நெய்க்கு பதிலாக ஜெகன் மோகனின் நிர்வாகம் விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாகவும், கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஜெகன் மோகன் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸை நினைத்தால் அவமானமாக உள்ளதாகவும் பதிவிட்டு, சந்திரபாபு பேசிய விடியோவை பகிர்ந்து இருந்தார் நாரா லோகேஷ்.

இதனைத் தொடர்ந்து, இந்த குற்றச்சாட்டுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா?

இது தொடர்பாக சுப்பா ரெட்டியின் எக்ஸ் தளப் பதிவில், “திருமலை பிரசாதம் குறித்து சந்திரபாபு நாயுடு தெரிவித்தக் கருத்துகள் தவறானவை. எந்த ஒரு மனிதரும் இதுபோன்ற வார்த்தைகளை பேசவோ, குற்றச்சாட்டுகளை வைக்கவோ மாட்டார்கள். அவர் திருமலை திருப்பதி கோயிலின் புனிதத்தையும், பல கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் காயப்படுத்தியுள்ளார்.

சந்திரபாபு நாயுடு அரசியல் ஆதாயத்திற்காக எந்தவொரு மோசமான செயலையும் செய்ய தயங்கமாட்டார் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

திருமலை பிரசாத விவகாரத்தில், பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் நான் மற்றும் எனது குடும்பம் அந்த கடவுள் மீது சத்தியம் செய்கிறோம். அதேபோல், சந்திரபாபுவும், அவரது குடும்பமும் சத்தியம் செய்யத் தயாரா?” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பா ரெட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக இரண்டு முறை இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024