தமிழ் ஆசிரியர் பணிக்கு இந்தியும், சமஸ்கிருதமும் எப்படி தகுதியாக இருக்க முடியும்? – சு.வெங்கடேசன் கேள்வி

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

தமிழ் ஆசிரியர்கள் தேர்வுக்கு எதற்காக இந்தி, சமஸ்கிருத மொழிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இந்திய கலாச்சார தொடர்புகளுக்கான கழகம் (Indian Council for Cultural Relations) செப்டம்பர் 13 2024 அன்று வெளியிட்டுள்ள பணி நியமன அறிவிக்கை அப்பட்டமாக இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பதாக உள்ளது. அது வெளியுறவு அமைச்சகத்தின் அலுவலகங்களில் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையிலான தமிழ் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்களை வரவேற்கிற அறிவிக்கை ஆகும்.

அதில் "விரும்பத்தக்க தகுதிகளாக" இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி சார்ந்த அறிவு குறிப்பிடப்பட்டுள்ளது. குறுகிய கால ஒப்பந்த அடிப்படையிலான தமிழ் ஆசிரியர்கள் தேர்வுக்கு எதற்காக இந்தி, சமஸ்கிருத மொழிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று இந்திய கலாச்சார தொடர்பு கழகம் "விரும்புகிறது" என்று தெரியவில்லை. இது அப்பட்டமான இந்தி சமஸ்கிருத திணிப்பே அன்றி வேறொன்றும் இல்லை.

இந்தியாவின் அலுவல் மொழி விதிகளில் இருந்தே விதி விலக்கைப் பெற்றுள்ள தனித்துவம் தமிழ்நாட்டிற்கு உண்டு. அது இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்தின் வெளிப்பாடு. மேற்கண்ட அறிவிக்கை அலுவல் மொழி விதிகளின் எழுத்துக்கும் எண்ணத்திற்கும் விரோதமானதாகும். தமிழ்நாட்டின் விண்ணப்பதாரர்கள் பெரும்பான்மையினருக்கு இந்தி/ சமஸ்கிருதம் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத போது அதை "விரும்பத்தக்க" தகுதியாக குறிப்பிடுவது அவர்களின் தேர்வு பெறும் வாய்ப்புகளை சீர் குலைப்பது ஆகும்.

ஆகவே இப்பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக அந்த அறிவிக்கையிலிருந்து இந்தி/ சமஸ்கிருதம் தொடர்பான அம்சத்தை நீக்குமாறு வலியுறுத்தி மத்திய அரசின் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தமிழாசிரியர் பணிக்கு இந்தியும், சமஸ்கிருதமும் எப்படி விரும்பத்தக்க தகுதியாக இருக்க முடியும்?வெளியுறவுத்துறையின் அப்பட்டமான இந்தி திணிப்பு மற்றும் தமிழ் விரோத முயற்சிக்கு எனது கடும் கண்டனம்.வெளியுறத்துறை அமைச்சர் இந்த அறிவிப்பினை திரும்பப் பெற வேண்டும்.@DrSJaishankar… pic.twitter.com/PdY50lRWsk

— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 19, 2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024