Friday, September 20, 2024

ஒரே அமரர் ஊர்தியில் 2 உடல்கள்… அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

திருப்பூர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டிபிரபு. இவர் திருப்பூர் எஸ்.வி.காலனியில் குடியிருந்து டிரைவராக வேலை செய்து வந்தார். கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் மனைவி தனது தாயார் வீட்டுக்கு சென்றார். இதில் மனம் உடைந்த பாண்டிபிரபு கடந்த 11-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பாண்டிபிரபுவின் உடல் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு 108 அமரர் ஊர்தி மூலமாக சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அமரர் ஊர்தியில் ஏற்கனவே விருதுநகரை சேர்ந்த ஒருவரின் உடல் ஏற்றி வைக்கப்பட்ட நிலையில், அதே அமரர் ஊர்தியில் பாண்டிபிரபுவின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் ஏற்ற முயன்றனர்.

இதற்கு பாண்டிபிரபுவின் தந்தை துரைராஜ், கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அமரர் ஊர்தியின் அவலத்தை வீடியோ எடுத்து வெளியிட்டு நியாயம் கேட்டார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதுதொடர்பாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் கூறும்போது, '108 அமரர் ஊர்தியை கால்சென்டரில் பதிவு செய்து அவர்கள்தான் ஊர்தியை ஒதுக்கீடு செய்வார்கள். விருதுநகர் வரை செல்லும் ஊர்தியில் பாண்டிபிரபுவின் உடலை எடுத்துச்செல்ல அவருடைய தந்தை முதலில் சம்மதித்துள்ளார். அதன்பிறகு எதிர்ப்பு தெரிவித்ததால், கால்சென்டர் மூலமாக தனி ஊர்தி ஒதுக்கீடு செய்யப்பட்டு உடலை அனுப்பி வைத்தனர்' என்றார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024