Friday, September 20, 2024

தமிழக மீனவர்களுக்கு கோடிகளில் அபராதம் விதிக்கும் இலங்கை: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

தமிழக மீனவர்களுக்கு கோடிகளில் அபராதம் விதிக்கும் இலங்கை: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?

ராமேசுவரம்: இலங்கை வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் கோடிக் கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக மீனவர்களிடையே கோரிக்கை வலுத்து வருகிறது.

இலங்கையின் வட மாகாண கடற்பகுதிகிளில் மீன்பிடியில் ஈடுபடும்தமிழக மீனவர்கள், இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகளை நாசப்படுத்தி விட்டுச் செல்கிறார்கள், மன்னார், யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் நடுக்கடலில் கூடுகளில் பிடிக்கப்படும் மீன்களை திருடிவிட்டுச் செல்கிறார்கள், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இலங்கையின் மீன்வளங்களையும் கடலின் சூழலியலையும் அழிக்கிறார்கள் என்றெல்லாம் குற்றஞ்சாட்டி மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பல்வேறு தொடர்ப் போராட்டங்களை நடத்தினர்.

இலங்கை மீனவர்களுக்கும் அபராதம், சிறை தண்டனை: இந்தத் தொடர் போராட்டங்களின் விளைவாக, இலங்கை கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் படகுகளைக் கொண்டு மீன்பிடிக்கும் அந்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவது போல, இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகள் மற்றும் மீனவர்களுக்கும் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கும் வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டம் கடந்த ஜனவரி 24, 2018 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தின் கீழ், எல்லை மீறும் மீனவர்களுக்கு சிறை தண்டனையும், 15 மீட்டர் நீளமுடைய படகுக்கு இலங்கை ரூ.50 லட்சம், 15 முதல் 24 மீட்டர் நீளமுள்ள படகுக்கு இலங்கை ரூ.2 கோடி, 24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுள்ள படகுக்கு இலங்கை ரூ.10 கோடி, 45 முதல் 75 மீட்டர் நீளமுள்ள படகுக்கு இலங்கை ரூ.15 கோடி, 75 மீட்டருக்கும் அதிகமுள்ள படகுக்கு இலங்கை ரூ.17.5 கோடி வரையிலும் அபராதம் விதிக்க முடியும். இதன் அடிப்படையில் இலங்கை எல்லைக்குள் சிறைப்பிடிக்கப்படும் தமிழக படகுகளுக்கு வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பபடுகிறது.

இலங்கை அரசு, வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தை உடனடியாக அமல்படுத்தாமல், முதல் முறையாக சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் சிறை தண்டனை மற்றும் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்கள். படகினை விடுவிப்பதற்கு அதன் உரிமையாளர்கள் ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்காடினால் படகுகளும் விடுவிக்கப்பட்டன.

தொடர்ந்து இரண்டாவது முறையாக சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு சிறை தண்டனையும் படகின் ஓட்டுநர்களுக்கு முதல்முறையாக சிறைப்பிடிக்கப்பட்டாலே சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. முதல்முறையாக சிறைப்பிடிக்கப்பட்டாலும் மீனவர்களுக்கு அபராதம் விதித்தல், அபராதத்தை கட்டத் தவறினால் சிறை தண்டனை விதிப்பது, அல்லது அபராதத்தையும் சிறை தண்டனையும் ஒரு சேர விதிப்பது என தற்போது முழுமையாக வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டங்களை இலங்கை நீதிமன்றங்கள் அமல்படுத்த துவங்கி உள்ளன.

இது குறித்து தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கத்தின் (ஏஐடியுசி) மாநிலச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் கூறியது: “கடந்த 2010-ல் துவங்கி பல கட்டங்களாக சென்னை, டெல்லி, கொழும்பு ஆகிய நகரங்களில் இரு நாட்டு மீனவப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகளைக் கொண்டு பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றன. இலங்கை நாடாளுமன்றத்தில் வெளிநாட்டு மீன்பிடித் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு மீனவர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாமல் இன்று வரையிலும் தாமதம் ஏற்பட்டுக் கொண்டே போகிறது.

இந்த வெளிநாட்டு மீன்பிடித் தடைச் சட்டத்தினை இலங்கை அரசு படிப்படியாக அமல்படுத்தி தற்போது மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் கோடிக் கணக்கில் அபராதம் விதிக்க துவங்கி உள்ளது. தினக்கூலிகளாக கடலுக்குச் செல்லும் மீனவர்களால் எவ்வாறு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் அபராதங்களை செலுத்த முடியும்? எனவே, இந்த வெளிநாட்டு மீன்பிடித் தடைச்சட்டத்தை ரத்து செய்ய இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதுடன், நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ள இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை விரைந்து நடத்தி தீர்வு காண வேண்டும்” என்றார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024