நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப் பதிவு!

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

நடிகை பார்வதி நாயர் மீது சென்னை தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அவரது வீட்டில் பணிபுரிந்த ஊழியரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பார்வதி நாயர், அயலான் படத்தின் தயாரிப்பாளர் கொடப்பாடி ராஜேஷ் உள்பட 7 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஊழியரைத் தாக்கிய பார்வதி நாயர்?

தமிழில் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, உத்தம வில்லன், நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர், சமீபத்தில் வெளியான விஜய்யின் கோட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

நடிகர் விஜய்யுடன் பார்வதி நாயர்.

இந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு இவரது வீட்டில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரங்கள், ஐபோன், மடிக்கணினி உள்ளிட்டவை காணாமல் போனதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், தனது வீட்டில் பணிபுரிந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்கா புறப்பட்டார் மோடி!

இதனிடையே, சுபாஷும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், பார்வதி நாயர் உள்பட 7 பேர் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், வீட்டின் அறையில் அடைத்து வைத்து பார்வதி நாயர் உள்பட 7 பேர் தன்னை தாக்கி துன்புறுத்தியதாக தெரிவித்திருந்தார். ஆனால், புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சுபாஷ் அளித்த புகார் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறைக்கு உத்தரவிட்டார். கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி உத்தரவிட்ட நிலையில், தற்போது வரை வழக்குப் பதியவில்லை என்று சென்னை காவல் ஆணையரிடம் மீண்டும் சுபாஷ் தரப்பில் இந்த வாரம் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, காவல் ஆணையரின் அறிவுறுத்தலின் பேரில், பார்வதி நாயர், கொடப்பாடி ராஜேஷ், அருண் முருகன், இளங்கோவன் செந்தில், அஜித் பாஸ்கர் உள்பட 7 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024