Wednesday, November 6, 2024

கொல்கத்தா: பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு ஆயிரக்கணக்கானோர் பேரணி

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர், கடந்த ஆகஸ்ட் 9-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சஞ்சய் ராய் என்ற நபரை கைது செய்தனர்.

தொடர்ந்து கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவின்படி, இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு பேரணி நடத்தினர். இந்த பேரணியில் மருத்துவர்கள், தன்னார்வ அமைப்புகள் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். 42 கி.மீ தூரத்தை இலக்காக கொண்ட இந்த பேரணியானது, நேற்று மாலை 4 மணிக்கு ஹைலேண்ட் பூங்காவில் தொடங்கி நள்ளிரவில் ஷியம்பஜார் அருகே நிறைவடைந்தது.

இந்த பேரணியின்போது பலர் மூவர்ணக்கொடி மற்றும் மொபைல் ப்ளாஷ் விளக்குகளை அசைத்தவாறு சென்றனர். பேரணியால் சில பகுதிகளில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பேரணியை நிறைவு செய்த மருத்துவர்கள், தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதாகவும், மருத்துவமனைகளில் அத்தியாவசிய சேவைகளை தொடங்குவதாகவும் அறிவித்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024