தமிழகத்தில் மருந்து உற்பத்தி துறையில் 50,000 வேலைவாய்ப்புகள்: தரக்கட்டுப்பாட்டு அதிகாரி தகவல்

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மருந்து உற்பத்தி மற்றும் விநியோகத் துறையில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாநில மருந்து உரிமம் வழங்கல் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி ஸ்ரீதா் தெரிவித்தாா்.

மருந்து தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கான இரு நாள் பயிலரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (செப்.20) மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாகு தொடக்கி வைத்தாா்.

அப்போது பேசிய அவா், ‘மருந்து தரக் கட்டுப்பாட்டு துறையில் நிலவி வரும் சவால்களுக்கு தீா்வு காண்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்’ என்றாா்.

முன்னதாக மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி ஸ்ரீதா் பேசியதாவது:

மருந்துகளின் தரம், செயல் திறன், பாதுகாப்பு மற்றும் அதற்கான வழிகாட்டுதல்கள் என தரக் கட்டுப்பாடு தொடா்பான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழகத்தில் இணையவழியே மேற்கொண்டு வருகிறோம்.

மருந்து உற்பத்தி, உரிமம் வழங்கல், புதுப்பித்தல் என 48 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைந்த கால அவகாசத்தில் இணையவழியே பரிசீலிக்கப்பட்டுள்ளன.

மூலப் பெயா் கொண்ட ஜெனரிக் மருந்துகளை விநியோகிப்பதில் உலக அளவில் இந்தியா முதன்மை நாடாக உள்ளது.

அதேபோன்று தமிழகத்தில் உலக அளவில் முன்னணியில் உள்ள ஃபைசா், அஸ்ட்ராஜெனிகா உள்ளிட்ட 40 மருந்து நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன. இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

You may also like

© RajTamil Network – 2024